பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

324

வல்லிக்கண்ணன்


களில் தீபம் இதழ்களில் வெளிவந்துள்ளன. திறமையுள்ள படைப்பாளிகள் பலரும் இதில் எழுதியிருக்கிறார்கள். புதிதாகத் தோன்றி வளர்ச்சி பெற்ற இளைய படைப்பாளிகளுக்கும் தீபம் பேராதரவு அளித்துள்ளது. கே. ராமசாமி, வண்ணதாசன், நாஞ்சில்நாடன் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

கு. அழகிரிசாமியும், கி. ராஜநாராயணனும் தொகுத்தளித்த நாடோடிக் கதைகள் சிறப்பானவை. தமிழ்நாட்டு நாடோடிக் கதைகளை மட்டுமல்லாது அரேபிய, பர்மிய, சீன மற்றும் பல நாடுகளின் கதைகளையும் சேகரித்து அழகிரிசாமி தமிழில் தந்திருக்கிறார்.

குறிஞ்சிவேலன் மலையாள மொழி நாவல்களைத் தமிழாக்கி உதவியுள்ளார். மலையாற்றூர் இராமகிருஷ்ணனின் ’ஐந்து சென்ட் நிலம்’ குறிப்பிடத்தகுந்த நாவல்.

விமர்சனத்துக்கும் தீபம் தன்னால் இயன்ற அளவு பணிபுரிந்து வருகிறது. ஆரம்ப வருடங்களில், மாணவர்கள் புத்தக விமர்சனங்கள் எழுதுவதற்காக் ’இரசனை அரங்கம்’ அமைத்துக் கொடுத்தது. வாசகர்கள் எழுதி அனுப்பிய புத்தக விமர்சனங்களை வெளியிட்டது. புத்தக மதிப்புரைப் பகுதி தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது. குறித்த ஒரு புத்தகம் பற்றி யாரேனும் ஒரு எழுத்தாளர் மதிப்புரைக்கும் விரிவான கட்டுரையும் மாதம்தோறும் வருகிறது.

இப்படியாக ’தீபம்’ அயராது இலக்கியப் பணி புரிந்து கொண்டிருக்கிறது.

‘ஓர் இலக்கியப் பத்திரிகைக்குள்ள சிரமங்களும் பெருமிதங்களும் தீபத்திற்கும் உண்டு. சிரமங்கள் இல்லாத பெருமிதங்கள் உலகில் கிடையாது. சிரமப்படுவதால்தான் பெருமிதம் அடைய முடிகிறது. சிரமங்களைக் கடக்க முயல்வதுதான் பெருமிதமாகவும் இருக்கிறது’ என்று தீபம் ஆசிரியர் ஒரு இதழில் குறிப்பிட்டிருப்பது நினைவில் நிற்கும் உண்மை ஆகும்.