பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

327


இந்த விதமாக சிறு பத்திரிகைகள் அல்பாயுசுடன் முடிந்து போவதற்குப் பொருளாதாரம்தான் மிக முக்கியமான காரணம் ஆகும்.

நீண்டகாலம் நீடித்திருப்பதற்குத் தேவைப்படக் கூடிய பணபலத்துடன் சிறு பத்திரிகைகள் துவக்கப்படுவதில்லை. பொருள் பலம் பெற்றவர்கள் ஆதரவையும் அருளையும் அவை பெறுவதில்லை. விளம்பரம், ஆயுள் சந்தா, தொடர்ந்து சந்தாப் பணம் என்று பண வரவுக்கான வாய்ப்பு அவற்றுக்கு இல்லை.

’தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று ஆரம்பிக்கப்படுகிற சிறு பத்திரிகைகள் 200 அல்லது 300 பிரதிகளே அச்சிடப்படுகின்றன. அதிகம் போனால், 500 பிரதிகள் அச்சாகலாம். போகப் போக அந்த எண்ணிக்கை குறைந்து, இறுதியில் 150 அல்லது அதற்கும் கீழே என்றாகிவிடும். அநேகமாக இவை முழுவதும் இலவசமாகவே வழங்கப்படும்.

பத்திரிகை நடத்துகிறவரின் நட்புக்காக, அன்புக்காக, முகத்துக்காக, தொந்தரவுக்காக—இவற்றில் எதுவோ ஒன்றுக்காக— ஆரம்பத்தில் பணம் கட்டுகிறவர்கள்கூட அப்புறம் சந்தாவைப் புதுப்பிப்பதில்லை. இதனால் பத்திரிகையின் வளர்ச்சி இயல்பாகவே பாதிக்கப்படுகிறது.

எனவேதான், பத்திரிகை உலகத்தில் பிறப்புகளைப்போலவே இறப்புகளும் சகஜமாகவும் சர்வசாதாரணமாகவும் இருக்கின்றன.

தன்மையினால் சிறு பத்திரிகையாகவும், நடைமுறையில் வியாபார முயற்சியாகவும் விளங்க முயல்கிற பத்திரிகைகள்கூட லாபகரமாக அமைவதில்லை. இவை வியாபார வெற்றிகளாக விளங்குவதில்லை, விளங்க முடிவதில்லை.

’தனிச் சுற்றுக்கு மட்டும்’ என்று கூறிக்கொள்கிற சிறு பத்திரிகைகள் சில நூறு பிரதிகளே அச்சிடப்படுமானால், வியாபார ரீதியிலும் இயங்க முடியுமா என்று பார்க்கிற சிற்றேடுகள் சில ஆயிரம் பிரதிகள் அச்சாவது நடைமுறை. சந்தாதார்கள் போக, நாட்டின் பல முக்கிய இடங்களிலும் ஏஜண்டுகள் நியமிக்கப்பட்டு இவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. சில நகரங்களில் ரயில்வே புத்தக நிலையங்களிலும் இவற்றில் சில கிடைக்கக் கூடும்.

தொழில் முறையில் ஜனரஞ்சகமாக மிகப்பெரும் அளவில் நடத்தப்படுகிற வணிகப் பத்திரிகைகள் வாரம்தோறும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகின்றன. அந்தச் சந்தையில் சிறிய பத்திரிகைகள் போட்டியிட வேண்டியதாகிறது. ஒரு சில ஆயிரம் பிரதிகள், மாதம்தோறும் என்பது மிகவும் குறைவானதுதான். ஆயினும், அவைகூட விற்பனையாவது இல்லை என்பது வருத்தத்துக்கு உரிய உண்மை ஆகும்.

இதற்கு வாசகர்களின் ரசனை, ஈடுபாடு, தரம் முக்கியக் காரணம் என்பதில் சந்தேகம் இல்லை. அதைவிட வெகு முக்கியமான காரணம், விற்பனையாளர்களின் நோக்கும் போக்கும்.