பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

வல்லிக்கண்ணன்


களால் தங்கள் பத்திரிகையின் பக்கங்களை நிரப்பி வைக்கிறார்கள. தரமான, நயமான, கனமும் ஆழமும் கொண்ட எழுத்துக்கள் கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள்.

இக் குறைபாட்டைத் தவிர்ப்பதற்காகச் சிலர் மொழிபெயர்ப்பு விஷயங்களை அதிகம் தர முனைகிறார்கள். இவற்றிலேகூட காலத்துக்கும் நாட்டுக்கும் நமது சமூக நிலைமைகளுக்கும் பொருந்தி வராத கட்டுரைகளையே சிலர் தேர்ந்தெடுக்கிறார்கள். அல்லது எங்கோ, எப்பவோ வெளியான ஒரு அரசியல் நூல் பற்றி ஏதோ ஒரு பத்திரிகையில் எவரோ ஒருவர் எழுதிய கடுமையான விமர்சனத்தைத் தமிழாக்கித் தருகிறார்கள்.

பத்திரிகைகள் நடத்துகிறவர்கள் தங்களை ’அறிவு ஜீவிகள்’ (இன் டெலக்சுவல்ஸ்) என்று காட்டிக்கொள்ள விரும்புகிற ஆசைதான் இவற்றின் மூலம் வெளிப்படுகின்றனவே தவிர, இந்த விதமான விஷயங்களால் தமிழ் வாசகர்களுக்கு ஒரு பயனும் கிடையாது. நம் நாட்டு நிலைமைகள், வாழ்க்கைப் பிரச்னைகள், தற்காலச் சிக்கல்கள் பற்றிய சிந்தனைக் கட்டுரைகளை வெளியிட்டால் பிரயோசனம் உண்டு. தமிழில் வெளிவந்து, போதிய கவனிப்புப் பெறாமல் போய்விட்ட நல்ல புத்தகங்கள் பற்றி எழுதினால் பலன் இருக்கும். தமிழ்ப் புத்தகங்கள் படைப்பாளிகள் பற்றிய அபிப்பிராயங்களையும் விமர்சனங்களையும் எழுதினால் அவை வளர்ச்சிக்கு வகை செய்யும்.

பத்திரிகையின் ஒவ்வொரு பக்கத்தையும் தரமும் நயமும் கலையும் உள்ளதாகத் தர முயல்வதே சிறு பத்திரிகை நடத்துகிறவர்களின் நோக்கமாக அமையவேண்டும்.

கம்மா பொழுதுபோக்காகவும், ’காலவகை’ என்றும் பத்திரிகை நடத்த முற்படாமல், படிக்கிற ரசிகனின் பொழுதைப் பொன்னாக்கக்கூடிய— அவனுக்கு மனநிறைவும், சிந்தனைக்கு உணவும் அறிவுப் பசிக்குத் தீனியும் தரக்கூடிய ஆக்கங்களாகச் சிறு பத்திரிகைகள் விளங்க வேண்டும்.

கால ஓட்டத்தில் அடிபட்டுப் போகிற தாள்களாக இராது, காலத்தினூடு நிலைபெற்று நின்று பெயர் சொல்லக்கூடிய சாதனையாகத் திகழ வேண்டும் என்ற லட்சிய தாகத்தோடு நடத்தப்படுகிற சிறு பத்திரிகைகளே சிறப்பானவையாக அமையும். அவையே இலக்கியத்துக்கும் மொழிக்கும் நல்லது செய்யமுடியும்.