பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எண்பதுகளிலும் பிறகும்


லக்கியத்துக்கென்று தொடங்கப்படும் சிறு பத்திரிகைகள் அவ்வப்போது தோன்றிக் கொண்டுதான் இருந்தன.

கவிஞர் ஆத்மாநாம் ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்திய ‘ழ’ என்ற இதழ் 1978 மே முதல் பிரசுரம் பெற்றது. 1983 ஜனவரியில் அதன் 24- ம் இதழ் வந்த பின் அது தேக்கமுற்றது. பிறகு 1987-ல் ‘ழ’ மறுமலர்ச்சி பெற்றது. கவிஞர் ஞானக்கூத்தின் அதன் ஆசிரியரானார். கவிதைகளையும், கவிதை சம்பந்தமான கட்டுரைகளையும் அது வெளியிட்டு வந்தது. 1988-ல் சில இதழ்கள் வந்தன. பின்னர் ‘ழ’ நின்று விட்டது.

1983 ஆகஸ்டில் பிரம்மராஜன் ’மீட்சி’ மாத இதழை ஆரம்பித்தார். சர்வதேசக் கவிஞர்கள் வரலாறு, உலகக் கவிதைகள் தமிழாக்கம், திரைப்படம் பற்றிய கட்டுரைகள், இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விளக்கங்கள் முதலியவற்றைத் தாங்கி வந்தது அது. சில வருடங்களுக்குப் பிறகு ’மீட்சி’ காலாண்டிதழாக மாற்றப்பட்டது.

‘மீட்சி’ காலாண்டிதழ் கனமான விஷயங்களோடும், அழகிய அட்டை அமைப்புடனும் இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. Non linear writting, Post Modern Literature என்று புதிய இலக்கியப் போக்குகளை அறிமுகம் செய்வதோடு, அவ்விதமான படைப்புகளைச் சோதனை ரீதியில் எழுதி வெளியிடுவதிலும் ’மீட்சி’ ஆர்வம் காட்டுகிறது.

1980 களின் மத்தியில் மறுமலர்ச்சியும் வளர்ச்சியும் காட்டிய முக்கியமான பத்திரிகைகள் ’கொல்லிப்பாவை’, ’ஞானரதம்’ ஆகியவை.

‘கொல்லிப்பாவை’ அ. ராஜமார்த்தாண்டன் பொறுப்பில், மிகுந்த ‘இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையே சில வருடங்கள் வளர்ந்தது. பன்னிரண்டு இதழ்களுக்குப் பிறகு அவர் அந்தக் காலாண்டிதழை நடத்தும் பொறுப்பை ஆர். கே. ராஜகோபாலனிடம் ஒப்படைத்தார். 1985 ஜூலை முதல், அதன் பதின்மூன்றாவது இதழிலிருந்து, 1988 ஜூன் வரை, இருபதாவது இதழ் முடிய ’கொல்லிப் பாவை’ நல்ல இலக்கியப் பணி புரிந்தது.

சுந்தர ராமசாமியின் ஒத்துழைப்பு ’கொல்லிப்பாவை’ க்கு அதிகம் கிடைத்து வந்ததை அதன் ஒவ்வொரு இதழும் எடுத்துக்காட்டியது. சுந்தர ராமசாமியின் கதை— கட்டுரைகள், பசுவய்யா கவிதைகள், மேல் நாடுகளின் கவிதை மொழிபெயர்ப்பு என்று பல வகைகளில் அது வெளிப்பட்டது.

பிறகு, 1988—ல் சுந்தர ராமசாமி காலச்சுவடு என்ற சொந்தப் பத்திரிகையைத் தொடங்கி விட்டார் .

தேவ. சித்ரபாரதி என்ற பெயர் கொண்ட அப்பாஸ் இப்ராகிம் ‘ஞானரதம்’ பத்திரிகையைப் பல வருடங்கள் நடத்தினார். 1986—ல் அதன் ஆசிரியப் பொறுப்பை அவர் க. நா. சுப்ரமண்யத்திடம் ஒப்படைத்தார்.