பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

332

வல்லிக்கண்ணன்


க. நா. சு. கவனிப்பில் ’ஞானரதம்’ நல்ல இலககிய ஏடாக ஒரு வருட காலம் வெளிவந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாக இப்ராகிம் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த விரும்பவில்லை. ஆகவே, 1987 ஜனவரி இதழ் அதன் கடைசி இதழ் ஆயிற்று.

அந்த இறுதி இதழில் க. நா. சுப்ரமண்யம் எழுதிய தலையங்கம் நினைவுகூரத்தகுந்தது. ’தமிழில் எழுத்துத் தரம் உயர’ என்பது தலைப்பு. அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்—

“பொதுவாகத் தமிழில் படிப்பது என்பதும், சிந்திப்பது என்பதும் ஆண்டுக்காண்டு குறைகிற மாதிரி தெரிகிறது.

இலக்கியம், பொதுவாகக் கலைகள் என்பது பற்றி எந்தச் சமுதாயத்தில் சிந்தனைகள் பெருகி வளரவில்லையோ அந்தச் சமுதாயத்தில் மற்ற வளங்களும் பெருகுவதில்லை என்பது சரித்திர அனுபவம்.

சரித்திர ரீதியில் மூன்று நாலு தலைமுறைகளாகவே ஒரு கலாச்சார நசிவுக்குத் தமிழ்ச் சமுதாயம் உட்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மற்ற இந்தியச் சமுதாயத்தில் ஏற்படாத இந்தக் கலாச்சார நசிவு இயக்கம் தமிழர்களிடையே இந்த நூறு ஆண்டுகளில் தன் வேலையைப் பூர்த்தி செய்துவிட்டது. இப்போது அதன் விளைவுகளை நாம் அனுபவிக்கத் தொடங்கியிருக்கிறோம்.

கலை என்றால் சினிமா, படிப்பு என்றால் குப்பைக் கூளங்களைப் படிப்பது, மனித உறவுகள் என்பது கேலிக்கிடமானவையாக நினைப்பது, எந்தச் சந்தர்ப்பத்திலும் கயலாபம் தேடுவது, அறிவு என்றால் பதவி வகிப்பது, பதவிகள் வகித்து முடிந்ததும் இந்தப் பதவிகளினால் லாபமில்லை என்று சொல்வது போலப் பல விஷயங்களை நாம் பார்க்கிறோம்.

அறிவுத் துறைகளில் விஞ்ஞானத் துறையிலும் விமரிசனத் துறையிலும் இன்று ஏற்பட்டிருக்கிற பஞ்சம் சொல்லி முடியாது.

அறிவுப் போலிகளும் இலக்கியப் போலிகளும் கல்விப் போலிகளும் மலிந்துவிட்டதை நாம் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை.

வாழ்க்கையைப் பற்றிப் புதிய பார்வை, புதிய நோக்கம் தமிழனுக்கு மிக அவசரமான தேவை. சமுதாயத்தில் தன் நிலையையும் தன்னிடம் உள்ள சமுதாய நோக்கையும் அவன் தெளிவு செய்து கொண்டு செயல்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றுதான் தோன்றுகிறது.

இதைத் தெளிவு செய்துகொள்ள எழுத்து, கலை உபயோகப்பட வேண்டும். நல்ல எழுத்தைத் தெரிந்துகொள்ள இயலாத சமுதாயம் நசிவுப் பாதையில் காலடி எடுத்து வைத்துவிட்டது என்று நிச்சயமாகச் சொல்லலாம்.”

இதை எழுதிய க. நா. சு. சிறு பத்திரிகைகள்— இலக்கியப் பத்திரிகைகள்—படிக்கிற வாசகர்களின் எண்ணிக்கை குறித்துப் பெருமைப்படலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

“தமிழ் வாசகர்களை மட்டும் குறை கூறிப் பயனில்லை. பேராசிரியர்கள், பாப்புலர் பத்திரிகைக்காரர்கள் எல்லோரும் பொதுஜன இலக்கிய