பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336

வல்லிக்கண்ணன்


இதழ்களை வெளியிட்டுள்ளது. இலக்கியத்தரமான விஷயங்களை சேகரித்து வெளியிட முயல்கிறது அது.

பாளையங்கோட்டையில், பல்கலைக்கழக ஆய்வு ரீதியான விஷயங்களுக்காகவே ’மேலும்’ என்ற பத்திரிகை பேராசிரியர்களால் நடத்தப்படுகிறது.

பேராசிரியர்—முனைவர் சாலை இளந்திரையன்—சாலினி, தமிழகத்தில் அறிவு விழிப்பு ஏற்படுத்தவும், பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்பவும் ’மனித வீறு’ என்ற இதழை, 1987 செப்டம்பர் முதல் ஓராண்டுக் காலம் வெளியிட்டனர். ஆழமும் கனமும் நிறைந்த விஷயங்களைக் கொண்டிருந்தது இதழ்.

ஐந்திணைப் பதிப்பகம், ஐந்திணை வாசகர் பேரவை சார்பில், ‘ஐந்திணை ஆய்விதழ்’ என்ற காலாண்டிதழை வெளியிடுகிறது. தமிழ் இலக்கணம், இலக்கியம், மொழியியல், நுண்கலைகள் சார்ந்த கட்டுரைகள், நூல் மதிப்புரைகள், குழந்தை இலக்கியம், அறிவியல்—சமூகம்பொருளாதாரம்—வரலாறு—தத்துவம் முதலியன சம்பந்தப்பட்ட கட்டுரைகள், புதிய வெளியீடுகள் பற்றிய தகவல்கள் இவ்விதழில் இடம் பெறுகின்றன.

இலக்கிய நோக்குடன், கனமான விஷயங்களையும் ஆழ்ந்த சிந்தனைகளையும் நாடுகின்ற உள்ளத்தோடு, வலிந்து சிரமங்களையும் சோதனைகளையும் எதிர்கொள்ளச் சித்தமாக இருப்பவர்கள் இப்பவும் உள்ளனர் என்பது மகிழ்ச்சி தரும் விஷயம் ஆகும்.

‘சிறு பத்திரிகைகள் குடிசைத் தொழில் போன்றவை’ என்று தி. ஜ. ரங்கநாதன் (தி. ஜ. ர. ) ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். குடிசைத் தொழில் முயற்சிகள் போல் பலப்பல சிற்றேடுகள் தமிழ்நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

முகம், நண்பர் வட்டம், தாராமதி, சுகன் போன்ற சிற்றிதழ்களை இவ்வகையில் குறிப்பிடலாம். சமூகம், அரசியல், மொழி மற்றும் தனி மனிதப் பிரச்னைகள் சம்பந்தமான கூரிய சிந்தனைகளைக் கட்டுரைகளாகவும், கவிதை வடிவத்திலும் இவை பிரசுரிக்கின்றன.

’முகம்’, மாமணி என்ற எழுத்தாளரின் எழுத்தாற்றலையும் உழைப்புத் திறனையும் வெளிப்படுத்துகிறது. ’தாராமதி’ குன்றம் மு. இராமரத்நம் என்ற எழுத்தாளரின் சிந்தனை ஆற்றலையும் தனித்த பார்வையையும் எடுத்துக்காட்டுகிறது.

சிறு பத்திரிகைகளின் வளர்ச்சியையும் நலன்களையும் கருத்தில் கொண்டு, அவற்றின் பிரச்னைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்கு உதவியாக அமைப்பு ரீதியில் ஏதேனும் செய்யவேண்டும் என்ற எண்ணம் சிறு பத்திரிகை நடத்துகிறவர்களுக்கு அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது.

இந்த நோக்கத்துடன், கோவை ’தாராமதி’ ஆசிரியர் குன்றம் மு. இராமரத்நத்தைத் தலைவராகக்கொண்டு ’TASNA’ —தாஸ்னா—என்ற அமைப்பு துவக்கப்பட்டு, மூன்று வருடங்களாகச் செயல்படுகிறது. ’தமிழ்நாடு ஸ்மால் நியூஸ்பேப்பர்ஸ் அசோஸியேஷன்’ என்ற அவ் அமைப்பு பலம் பொருந்தியதாக வளரவில்லை இன்னும்.

இதுபோன்ற ஒன்றிரு முயற்சிகள் சென்னையிலும் திட்டமிடப்பட்டன. அவையும் சரியாக உருவாகவில்லை.