பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1980களில் சிற்றிதழ்கள்


தமிழ்ச் சிற்றிதழ்களின் வரலாறு சுவாரசியமானது பல உண்மைகளை வெளிப்படுத்தக்கூடியது. இலட்சிய நோக்குடைய ஒரு சிலருடைய விடாப்பிடியான முயற்சிகளையும், மனப்போராட்டங்களையும், அவர்கள் ஏற்றுக் கொண்ட சிரமங்களையும் எடுத்துக்காட்டுவது அது. அதேசமயம், அவர்களுடைய தோல்விகளையும் ( தோல்வி என்ற சொல் சரியில்லை என்று தோன்றினால், செயல் முடக்கம் அல்லது செயலற்ற தன்மை என்று சொல்லலாம் ), இவ்வரலாறு பளிச்செனப் புலப்படுத்துகிறது.

சிறுபத்திரிகைகளின் வரலாறு முழுவதும், உற்சாகமான பத்திரிகை எழுச்சிகளையும், அவற்றின் ‘சென்று தேய்தல்’களையும், முடிவில் உரிய மரியாதை பெறாது, நேரிய புகழ் பாடப்பெறாது, நினைவுகூர யாருமின்றி—Unhonoured, unsung and unwept—என்ற தன்மையில் அவை கவனிப்பற்று மறைந்துபோக நேர்வதையும் கொண்டிருக்கிறது.

1970களில் இலக்கிய உணர்வோடும், இலட்சிய நோக்கத்துடனும் சிற்றிதழ்கள் அதிகமாகவே தோன்றின. அவற்றில் ஒருசிலவே 1980களிலும் தொடர்ந்து வாழும் வாய்ப்பைப் பெற்றிருந்தன.

1970களின் பிற்பகுதியில், சிற்றிதழ்கள் இலக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துவதோடு நின்றுவிடாது. கலை, கலாச்சாரம், சமூகவியல், அரசியல், தத்துவம் முதலிய பல்வேறு விஷயங்களிலும் அக்கறை காட்ட வேண்டியது அவசியமாகும் என்ற உணர்வு தீவிரம் பெற்றிருந்தது. சில பத்திரிகைகள், சாதி— சமய— இனப் பிரச்சினைகளிலும் மும்முரமான ஈடுபாடு காட்டலாயின.

வற்றா இருப்பு— புதுப்பட்டி என்ற ஊரில் 1976—ல் ஆரம்பிக்கப்பட்ட ‘இலக்கிய வெளிவட்டம்‘, இவ்வகையில் முன்னின்றது. 1980களில், சர்ச்சைக்குரிய சூடான கட்டுரைகளை அது பிரசுரித்தது. 1983—ல் இலங்கையில் நிகழ்ந்த இனப்படுகொலை பற்றி அதிகக் கவலையும் தீவிர அக்கறையும் காட்டியது. தமிழகத்தின் தென்மாவட்டங்களில் உள்ள சிறுபத்திரிகைச் சூழல் சேர்ந்தவர்கள் மற்றும் கலாச்சார அமைப்புகள் இணைந்த கருத்தரங்கம் ஒன்றை 1983 ஆகஸ்டில், மதுரையில், ‘இலக்கிய வெளிவட்டம்‘ ஏற்பாடு செய்தது. சுயேச்சை எழுத்தாளர்கள்

த-22