பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

340

வல்லிக்கண்ணன்


‘யாத்திரா‘வின் அறிவிப்பு இது:

“தற்போதைய தமிழ்ச் சூழலில், ஒரு கலாச்சார விழிப்புணர்வுக்குச் சிறுபத்திரிகை இயக்கம் எந்த அளவு தேவை என்பதைக் கருத்தில் கொண்டே, நாங்கள், பலவித சிரமங்களுக்கிடையிலும் ‘யாத்ராவை’ நடத்துவதில் ஒரு விடாப்பிடியான தீவிரத்தைக் கொண்டிருக்கிறோம். இதில், எங்களுடைய தீவிரம்மட்டும் போதாது; இவ்வியக்கத்தில் பங்கு கொள்ளும் உங்களிடமிருந்தும் ஒரு பொறுப்புணர்வின் ஒரு அம்சம், யாத்ராவிற்கு சந்தா அனுப்புவதும் ஆகும். ஒரு சிறுபத்திரிகையை நடத்தும் சிரமத்தை ஒருசிலர்மட்டுமே தாங்கக்கூடுமா என்பதை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்றைய சூழலில், சிறு பத்திரிகை ஒன்றோடு சம்பந்தம் கொள்வது என்பது, வெறுமனே அதனை வாசிப்பதோடு மட்டும் நின்றுவிடக் கூடாது. அப் பத்திரிகை தொடர்ந்து வெளிவரத் தங்களால் ஆன உதவிகளையும் செய்யக்கூடிய பொறுப்புணர்வு நமக்கு வேண்டும் என நாங்கள் நினைக்கிறோம்.

“இந்தச் சமயத்தில், இன்னொரு விஷயத்தையும் சொல்ல வேண்டும். சிறுபத்திரிகை இயக்கம் வெறுமனே எழுத்து, இலக்கியம் என்றில்லாமல், தன்னுடைய இயக்கக் களனை மற்றக் கலாச்சாரங்களுக்கும் விரித்து ஒரு சமூக அக்கறையுடன் செயல்பட்டுவரும் சமயத்தில், இத்துறை சம்பந்தப்பட்டவர்கள், சிறு பத்திரிகைகளிடம் காட்டும் அலட்சியம் எங்களுக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது. அதேசமயத்தில், இக்கலாச்சாரத் துறைகளின் பாதிப்பினால் விழிப்புணர்வு பெற்ற பலர் சிறு பத்திரிகையின் இயக்கத்தின் அவசியத்தை உணர்ந்து, இதனோடு தங்களை இணைத்துக்கொள்ள முன்வருவது எங்கள் அனுபவத்தில் நாங்கள் கண்ட உண்மை, எங்களுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கும் விஷயமும் கூட.

“மிகுந்த ஒருங்கிணைப்புடன் செயல்பட வேண்டிய சூழல் இது. ஒரு கலாச்சாரத் துறையில் ஏற்படும் வளர்ச்சி என்பது ஒரு பொறியாக மாறி, மற்றக் கலாச்சாரத் துறைகளையும் பாதிக்க வேண்டும்; அதற்கான சூழல் உருவாக வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்... இன்றைய சிறுபத்திரிகை இயக்கங்கள் விரிந்து, மற்றக் கலாச்சாரத் துறைகளோடு சம்பந்தம் கொண்ட ஒன்றாகி விட்டது. இந் நிலையில், அனைவரும் பங்கு கொண்டு பேணிப் பாதுகாக்க வேண்டிய ஒரு இயக்கம் சிறு பத்திரிகை இயக்கம் என்பதை நாம் உணரவேண்டும்.”

இவ்வாறு ‘யாத்ரா‘, தனது கருத்தை வெளியிட்டது. இத்தகைய வலுவான சிந்தனைகளை ‘யாத்ரா‘ வளர்த்தபோதிலும், அந்தக்