பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

341


காலாண்டிதழ் காலம் தவறாது வெளிவர இயலவில்லை. 1980லும் ஒருசில இதழ்களையே அது வெளியிட முடிந்தது. 1983—ல், 44—45—46 என்ற எண்கள் இட்ட ஒரு இதழைத் தயாரித்து விட்டுத் தனது இயக்கத்தை அது நிறுத்திக்கொண்டது.

1970களில் உற்சாகமாக இலக்கியம் வளர்க்க முயன்ற நாகர்கோவில் ‘சதங்கை‘, கோயம்புத்தூர் ‘வானம்பாடி‘, உதகமண்டலம் ‘ஸ்வரம்‘ ஆகியனவும் நீடித்து வாழமுடியாமல், 1980களின் முற்பகுதியில் மறைந்து போயின.

1983—ல், தனது 16ஆவது இதழைக் கடைசி இதழாகக் கொண்டு முடிவுற்ற ‘ஸ்வரம்‘ சிற்றிதழின் வளர்ச்சி சுவாரசியமானதாகும். இலக்கிய ஆர்வம் கொண்ட ஒரு மாணவர், ‘ஸ்வரம்‘ முதலாவது இதழை ‘இண்லண்ட் லெட்டர்‘ தாளில் அச்சிட்டு அனுப்பினார். தொடர்ந்து இதழுக்கு இதழ்வெவ்வேறு வடிவம் கொண்டு வெளிவந்த ‘ஸ்வரம்‘, 8ஆவது இதழ் முதல் ( 1982 செப்டம்பரில்), புதிய வடிவமும் உள்ளடக்க மாற்றமும் பெற்றது. பிரம்மராஜன், அதன் சிறப்பாசிரியரானார். ஐரோப்பியக் கவிஞர் அறிமுகம், சர்வதேசக் கவிதைகள் மொழிபெயர்ப்பு எல்லாம் அதில் இடம் பெறலாயின. அட்டையும், நவீன ஓவியத்துடன், வசிகரத் தோற்றம் பெற்றது. ஆயினும், 16 இதழ்களுக்குமேல் ‘ஸ்வரம்‘ வளரவில்லை.

அதன் தொடர்ச்சி போல, 1983 ஆகஸ்டில், பிரம்மராஜன், சொந்தமாக ‘மீட்சி‘ மாத இதழை ஆரம்பித்தார். சர்வதேசக் கவிஞர்கள் வரலாறு, உலகக் கவிதைகள் தமிழாக்கம், திரைப்படம் பற்றிய கட்டுரைகள், இலக்கியக் கோட்பாடுகள் குறித்த விளக்கங்கள் முதலியவற்றைத் தாங்கி வந்தது, ‘மீட்சி‘. சில வருடங்களுக்குப் பிறகு, பிரம்மராஜன், ‘மீட்சி‘யை காலாண்டிதழாக மாற்றிவிட்டார்.

‘மீட்சி‘ காலாண்டிதழ், கனமான விஷயங்களோடும், அழகிய அட்டையமைப்புடனும் தொடர்ந்து வந்தது. Nonlinear எழுத்துகள், ‘போஸ்ட் மாடர்ன் லிட்டரேச்சர்‘ என்று புதிய இலக்கியப் போக்குகளை அறிமுகம் செய்து, அவ்விதமான படைப்புகளைச் சோதனை ரீதியில் எழுதி வெளியிடுவதிலும் மீட்சி ஆர்வம் காட்டியது.

தரமான முறையில் சிறபத்திரிகை நடத்துவதில் அக்கறை கொண்டிருந்தவர்கள், இலக்கியச்சூழல், வாசகர் மனநிலை, நாட்டின் நிலை பற்றியெல்லாம் சிந்தனை வளர்த்துக் கவலையோடு அபிப்பிராயங்கள் தெரிவிக்கத் தவறியதில்லை. தனியான குணங்களைக் கொண்ட முறையில், பெங்களூரிலிருந்து வெளிவந்த ‘படிகள்‘ என்ற காலாண்டு ஏடு, அவ்வப்போது ஆழ்ந்த சிந்தனைகளை ஒலிபரப்பியது.