பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

349


தனி இலக்கிய நோக்குக் கொண்ட தீபம், கணையாழி பத்திரிகைகள், 1980களில் நல்ல வளர்ச்சி காட்டின. வெள்ளி விழா ஆண்டை நெருங்கிக்கொண்டிருந்த ‘தீபம்‘ மிகுந்த சிரமங்களோடு வளர்ந்தது. 1986 இறுதியில், ‘தீபம்’ நா. பார்த்தசாரதி திடீர் மரணம் அடையவும், ‘தீபம்‘ இதழ், சில இதழ்களை வெளியிட்டுவிட்டு ஒடுங்கியது.

‘கணையாழி‘, வெள்ளிவிழா ஆண்டைக் கொண்டாடியது. 1990களில், இவ்விதழ் உருவமாற்றம் பெற்றுத் தனது இலக்கியப் பணியைத் தொடர்ந்தது.

எண்பதுகளில் நின்றும் தோன்றியும், சிரமங்களோடு, இலட்சிய நோக்கை விடாது கைக்கொண்டு வெளிவந்த சிற்றிதழ்களில், புதிய நம்பிக்கையும் ஒன்று. 90களில், ‘புதிய நம்பிக்கை‘ புதிய உருவமைப்புனும் புதிய உத்வேகத்தோடும் வரலாயிற்று.

1980களில், சிறு பத்திரிகை வட்டாரத்தில் ஒரு புதிய நோக்கு வெளிப்பட்டது. கனமான விஷயங்களைத் தாங்கிக் குறைந்த அளவு வாசகர்களைமட்டுமே எட்டக் கூடிய சிற்றிதழ்கள் மற்றும், நிரம்ப ‘லைட்டான‘ விஷயங்களோடு மிக அதிக அளவு வாசகர்களை அடைகிற ஜனரஞ்சகப் பத்திரிகைகள். இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட, நடுவாந்தரமான இதழ்களே— ‘மிட்வே ஜர்னல்‘— தற்காலத் தேவையாகும். இந்த வகையான இதழ்கள்— நிரம்பவும் கனமான விஷயங்களாகவும் இல்லாது, மிக லைட்டான விஷயங்களாகவும் இல்லாது, வாசகர்களின் ரசனையை வளர்த்துப் பண்படுத்தக்கூடிய விஷயங்களை வெளியிடும் பத்திரிகைகள்நடத்தப்படவேண்டும் என்ற கருத்துப் பல இடங்களிலும் எழுந்து ஒலித்தது.

அத்தன்மையில், கவிஞர் மீராவும் சில பேராசிரியர்களும் சேர்ந்து, ‘அன்னம் விடு தூது’ என்ற மாதப் பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினார்கள். பத்திரிகை நன்றாக இருந்தது; ரசிகர்களின் பாராட்டுகளை அதிகம் பெற்றது, ஓரளவு வரவேற்பும் இருந்தது அதற்கு. ஆனாலும், பத்து மாதங்களில், பத்தாயிரம் ரூபாய் நஷ்டம் என்று கூறி, பத்தாவது இதழுடன் பத்திரிகையை நிறுத்திவிட்டார்கள்.

பேராசிரியர் தமிழவனும் சிலரும் சேர்ந்து, பெங்களூரில், ஒரு ‘மிட்வே ஜர்ன‘லை ஆரம்பித்தார்கள். ‘இன்று—இங்கே‘ என்ற பெயரில், இலக்கிய நோக்குடன் தொடங்கப்பெற்ற இந்த இதழ், போகப் போக, வாசகர்களுக்குப் பிடித்தமான பரபரப்பு விஷயங்களை வெளியிடுவதில் ஆர்வம் காட்டலாயிற்று. அப்படியும் ஒரு வருடத்துக்கு மேலாக அது தாக்குப்பிடிக்க முடியவில்லை.