பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

37


'கௌரவ ஆசிரியர்' ஆகக்கொண்டு கிராம ஊழியன் மறுமலர்ச்சி இலக்கிய மாதம் இருமுறை வெளியீடாக வரத் தொடங்கியது.

புதிய வடிவம், புதிய தோற்றம், புதிய உள்ளடக்கம் அவற்றுடன், ‘கிராம ஊழியன்' 1943- ஆகஸ்ட் 15-ம் தேதி இலக்கிய உலகில் பிரவேசித்தது.

'தமிழ்நாட்டில் பாரதியை மூலபுருஷனாகக் கொண்ட மறுமலர்ச்சி துவக்கின. இருபத்தைந்து வருஷங்களுக்குப் பிறகு, அதன் உன்னத யௌவனப் பருவத்தில் ஊழியன் தோன்றுகிறான். இலக்கியம் மதவுணர்ச்சித் துறைகளில் பாரதி முதலில் காட்டின வழியைப் பணிவுடன் பின்பற்றி, தன்னாலியன்ற வரையில் பணிபுரிவான்' என்றும், ஊழியன் சக்தியின் கைக்கருவி என்றும் மறுமலர்ச்சி பெற்ற கிராம ஊழியன் முதலாவது இதழில் எழுதப்பட்டிருந்தது.

ஒரு இலக்கியப் பத்திரிகைக்கு கிராம ஊழியன் என்ற பெயர் கொஞ்சம்கூடப் பொருத்தமானது அல்ல. இதை ஊழியன் நிர்வாகிகள் ஆரம்பம் முதலே உணர்ந்துதான் இருந்தார்கள். வேறு பெயர் வைப்பதற்கு அவர்கள். முயன்றதும் உண்டு. ஆனால், 'புதிய பத்திரிகைகளுக்கு டிக்ளரேஷன்' கிடையாது என்றிருந்த அக்காலத்திய நிலை, வேறு வழி இல்லாது செய்து விட்டது.

எனவே, 'கிராம' என்ற எழுத்துக்களை மிகச் சிறிதாகவும், ‘ஊழியன்' என்பதைப் பெரிதாய் எடுப்பாகவும் அச்சிட்டு திருப்திப்பட்டுக் கொண்டார்கள்.

கிராம ஊழியன் பிரஸ் லிமிடெடுக்காக அ. வெ. ர. கிருஷ்ணசாமி பிரசுரகர்த்தராக இருந்து வெளியிட்டு வந்த கிராம ஊழியன் மாதமிரு முறையின் ஆசிரியர் திருலோக சீதாராம். கு.ப. ராஜகோபாலன் கௌரவ ஆசிரியர்.

1943-ஆண்டு 15 முதல் நான்கு மாத காலம் இப்படி இருந்து. பிறகு 1944 ஜனவரி 1-ம் தேதி இதழிலிருந்து, கு. ப. ராஜகோபாலன் ஆசிரியர் என்றும், திருலோக சீதாராம் நிர்வாக ஆசிரியர் என்றும் அச்சிடப்பட்டது.

கு. ப. ரா. கும்பகோணத்தில்தான் இருந்தார். அங்கிருந்தபடியே, ஒவ்வொரு இதழுக்கும் விஷயங்கள் எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். கதை, கட்டுரை ஓரங்க நாடகம்-இப்படி ஒவ்வொரு இதழுக்கும் இரண்டு மூன்று விஷயங்கள் எழுதினார். மகாராஷ்டிர மன்னன் சிவாஜியின் வரலாற்றைக் கதைபோல் தொடர்ந்து எழுதி வந்தார். அது ‘பரத்வாஜன்'