பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

45


செல்வங்கள் பற்றிய கட்டுரைகளோடு, நாவல், சிறுகதை ஆகியவற்றுக்கும் இடம் அளித்து வந்தது.

ஜனரஞ்சகப் பத்திரிகையாக, நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்குடன், 'ஆனந்த விகடன்' தோன்றி வளர்ந்தது, மாதப் பத்திரிகையாக ஆரம்பித்து, 'மாதம் இருமுறை' ஆகி, பின் 'மாதம் மும்முறை' என்று வந்து, பிறகு 'வாரப் பத்திரிகை'யாக மாறி ‘விகடன்' வளர்ச்சி பெற்றது, ஜனரஞ்சகப் பத்திரிகையின் வெற்றிக்கு நல்ல எடுத்துக்காட்டு ஆகும்.

‘விகடன்' வாயிலாக ‘கல்கி' ரா. கிருஷ்ணமூர்த்தி தமது எழுத்தாற்றலினால் தமிழ்நாட்டில் பரவலாக வாசகர்களையும், பத்திரிகையை ஆவலோடு எதிர்பார்த்து வரவேற்றுப் படிக்கும் பழக்கத்தையும் அதிகரிக்கச் செய்தார். -

வாழ்க்கையை மேலோட்டமாகப் பார்ப்பதும், வாழ்க்கையின் துன்ப துயரங்கள், ஏமாற்றங்கள், வெறுமை, வறட்சி முதலியவைகளைக் காண மறுப்பதும், பொதுவாக இனிமைகளையும் சுகங்களையும் கிளுகிளுப்பூட்டும் விஷயங்களையும் கதைப்பொருள் ஆக்குவதுமே விகட மனோபாவமாகவும், 'கல்கி'யின் நோக்கு ஆகவும் இருந்தது. அவ் வழியில் அவரைப் பின்பற்றி எழுதுகிறவர்கள் பெரும் பலர் ஆயினர்.

இந்த ரக எழுத்து பொழுதுபோக்கு அம்சத்தையே வலியுறுத்தியது. ‘விகடன்' அரசியல் கருத்துக்களையும்-முக்கியமாக தேசியப் பார்வையில், காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும் செயல்களையும் பிரசாரப்படுத்தும் எழுத்துக்களை- அந்த அந்தக் காலத்திய அதிவிசேஷமான செய்திகளையும், சங்கீதம், சினிமா போன்ற கலை விஷயங்களையும் வெளியிட்டதுடன் கதைகளுக்கு அதிக இடமும், பழந்தமிழ் இலக்கியத்துக்கு ஒரு சில பக்கங்களும் ஒதுக்கியது. 'தொடர்கதை'யை வாசகர்களை வசீகரித்து, விடாது பிடித்து வைத்திருக்கும் உத்தியாகவும், பத்திரிகையின் விற்பனையை வளர்க்கத் துணைபுரியும் ஒரு சாதனமாகவும் ஆக்கியது.

மொழி வளர்ச்சி, மொழி மறுமலர்ச்சி காரணமாக இந்திய மொழிகள் அனைத்துமே சிறுகதைக்கு அதிகமான கவனிப்பு அளித்து வந்த காலம் அது சஞ்சிகைகளும், வாரப் பத்திரிகைகளும் மட்டுமல்லாது, தினப் பத்திரிகைகள் கூடக் கதைகளை வரவேற்றுப் பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருந்தன. 'ஓரங்க நாடகம்’ எனும் இலக்கியப் பிரிவு