பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

51


ஜோதி நிலையத்தின் முயற்சியைத் தொடர்ந்து சக்தி காரியாலயமும் சர்வதேசக் கதைகளின் மொழிபெயர்ப்பைச் சிறுசிறு வெளியீடுகளாகப் பிரசுரித்தது.

1940 களில் நிகழ்ந்த மற்றுமொரு சாதனை, அல்லயன்ஸ் குப்புசாமி அய்யர் வெளியிட்ட 'கதைக் கோவை' ஆகும். ஒரு வருடத்தில் பத்திரிகைகளில் வெளிவந்த நல்ல சிறுகதைகளைத் தேர்ந்து தொகுத்து ஒரு கோவை ஆகப் பிரசுரிக்கும் முயற்சி. இதன்படி, முதல் வருடம் முப்பது எழுத்தாளர்களின் முப்பது கதைகளும், இரண்டாவது வருடம் நாற்பது எழுத்தாளர்களின் நாற்பது கதைகளும் கோவை ஆக வெளியிடப்பட்டன. மூன்றாவது தொகுதி ஒன்றும் வெளிவந்தது. அதன் பிறகு இம் முயற்சி. தொடர்ந்து செயல்படுத்தப்படவில்லை. -

நாவலுக்கு என்று மட்டுமே வெளிவந்த பத்திரிகைகள் அந்தக் காலத்திலும்- அதாவது 1930 களிலேயே-இருந்தன.

நாவல்கள் எழுதிப் பிரசித்த பெற்றிருந்த வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதும் புதிய நாவல்களை, மாதத்துக்கு இத்தனை அத்தியாயம் என்ற ஒரு கணக்கில், தொடர்கதை ரீதியில் வெளியிடுவதற்காக மனோரஞ்சிதம் என்ற மாதப் பத்திரிகை வந்து கொண்டிருந்தது. வடுவூராரின் நாவல்களைப் புத்தகங்களாகப் பிரசுரித்து வியாபாரம் பண்ணிய நிறுவனம்தான், வணிக நோக்கில் அந்தப் பத்திரிகையையும் நடத்தி வந்தது.

வடுவூர் பாதையில் நாவல் எழுத ஆரம்பித்து, பின்னர் காந்தியம், சமூக சீர்திருத்தம், மாதர் முன்னேற்றம் ஆகிய நோக்குகளுடன் நாவல்கள் படைப்பதில் தனது கவனத்தைத் திருப்பிக்கொண்ட வை. மு. கோதை நாயகி, தன் நாவல்களைத் தொடர்கதை ரீதியில் வெளியிடுவதற்காக ‘ஜகன்மோகினி' என்ற மாதப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருந்தார்.

‘ஆனந்த போதினி' என்ற இலக்கிய மாசிகையைப் பிரசுரித்து வந்த நா. முனிசாமி முதலியார், பிரசண்ட விகடன் என்ற மாதம் இருமுறைப் பத்திரிகையையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார், ஆனந்த விகடன் மாதிரி ( ஆனால், பத்திரிகை 'தீபம்' சைஸ் இருக்கும் ). பல வருஷங்கள் வெளிவந்த இந்தப் பத்திரிகையின் ஆசிரியர், நாரண துரைக் கண்ணன். அவர் எழுதிய நாவல்கள் அந்நாட்களில் பரவலான கவனிப்பைப் பெற்றன. 'இவ்வுலகைத் திரும்பிப் பாரேன்', 'நான் ஏன் பெண்னாய் பிறந்தேன்?’, ‘சீமாட்டி கார்த்தியாயினி', 'உயிரோவியம்', 'தாசி ரமணி'