பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

வல்லிக்கண்ணன்


போன்ற நாவல்கள், நகரங்களில் மட்டுமின்றி, கிராமங்களிலும் வாசகர்களால் ஆவலுடன் வரவேற்று விரும்பிப் படிக்கப்பட்டன.

‘பிரசண்ட விகடன்' இன்னொரு விதத்திலும் குறிப்பிடத்தகுந்த பத்திரிகையாக விளங்கியது. ஆசிரியர் நாரண துரைக்கண்ணன் ‘இன்னார் இனியார் என்று பாராது' புதிய எழுத்தாளர்களுக்கெல்லாம் ஊக்கமூட்டி உற்சாகம் அளித்து வந்ததால், எழுத்தில் ஆசையோடு அடி எடுத்து வைத்து ஆர்வத்தோடு எழுதி முன்னேறத் துடித்த இளைஞர்கள் பலருக்கு நல்ல பயிற்சித் தளமாக உதவியது அந்தப் பத்திரிகை.

புதுக்கோட்டையிலிருந்து வந்து கொண்டிருந்த 'திருமகள்', 'அணிகலம்' போன்ற சிறிய பத்திரிகைகளும் இப்படி இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளித்து, அவர்களுடைய திறமை ஒளிர்வதற்கு நல்ல துணையாக உதவின.

1940 களின் இறுதிக் கட்டத்தில், சென்னையில் அ. கி. ஜயராமன், அ. கி. கோபாலன் இருவரும் நாவலுக்கென்றே 'காதம்பரி' என்ற மாதப் பத்திரிகையைத் தொடங்கினார்கள். ஜயராமன் 'ஜோதி நிலையம்' மூலம் நல்ல நாவல்களையும் சிறுகதைத் தொகுப்புகளையும் பிரசுரித்து வந்தார். கோபாலன் தமிழ்ச் சுடர் நிலையம் மூலம் அருமையான மொழி பெயர்ப்பு நாவல்களையும், தரமான படைப்புகளையும் வெளியிட்டுப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

மாதம் தோறும் 'ஒரு முழு நாவல்' வெளியிடவும், மற்றும் சிறுகதைகள், கட்டுரைகள் போன்ற அம்சங்களைப் பிரசுரிக்கவும் 'காதம்பரி' தோன்றியது. பிரசுர வாய்ப்பைப் பெறாமலே கிடந்த புதுமைப்பித்தனின் ‘கயிற்றரவு' கதை இதில்தான் முதன் முறையாக அச்சாயிற்று. மாதம் தோறும் பிரசுரமாகும் நாவலுக்கு ஒரு பவுன் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவித்தது ‘காதம்பரி'.

‘காதம்பரி' நீண்ட நாள் வாழவில்லை. ஆறு இதழ்களோ என்னவோ தான் வந்தன.

1940 களின் இறுதியில் வெளிவந்த பத்திரிகைகளில் பேராசிரியர் ஆ. சீனிவாசராகவனை ஆசிரியராகக் கொண்டிருந்த 'சிந்தனை' என்ற மாதப் பத்திரிகை குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியதாகும். அ.சீ ரா. மாணவர்கள் மத்தியில் நல்ல செல்வாக்கும், எழுத்தாளர்களிடையே கவனிப்பும் மதிப்பும் பெற்றிருந்த கல்லூரிப் பேராசிரியர். ஆங்கில