பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

57


சிறுகதைகள், சிந்தனைக்கு வளம் சேர்க்கும் கருத்துச் செறிவுள்ள கட்டுரைகள், தத்துவம், கலாச்சாரம், விஞ்ஞானம், பொருளாதாரம் சம்பந்தமான பலப்பல கட்டுரைகள், நல்ல கவிதைகள்-இப்படி எவ்வளவோ விஷயங்களை 'சரஸ்வதி' அதன் காலத்தில் வழங்கியிருக்கிறது.

தலைசிறந்த ஒலிப்பதிவாளர்களில் ஒருவரான நிமாய்கோஷ் திரைப்படத் தொழில் பற்றிக் கட்டுரைகள் எழுதினார். சதுரங்கம் குறித்தும், போட்டோக் கலை பற்றியும் விளக்கக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

எழுத்தாளர் ஜெயகாந்தன் வளர்ச்சிக்கு 'சரஸ்வதி' பெரிதும் உதவியது. சுந்தர ராமசாமி, வல்லிக்கண்ணன், கிருஷ்ணன் நம்பி மற்றும் இலங்கை எழுத்தாளர்கள் டொமினிக் ஜீவா, கே. டானியல், காவலூர் ராசதுரை முதலியோரின் சிறந்த கதைகள் பலவற்றை 'சரஸ்வதி' பிரசுரித்திருக்கிறது.

தகழி சிவசங்கரப் பிள்ளையின் 'தோட்டியின் மகன்' நாவல் சுந்தர ராமசாமியின் தமிழாக்கமாகத் தொடர்ந்து வந்தது. சுந்தர ராமசாமியின் 'புளியமரம்' நாவலின் முதல் பாதி வெளிவர வசதி செய்தது. வல்லிக்கண்ணன் எழுதிய ‘அடிவானம்' நாவலின் ஒரு பகுதியை வெளியிட்டுள்ளது.

க. நா. சுப்ரமணியம், சி. சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், ரகு நாதன், ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஆர். கே. கண்ணன், சாமி சிதம்பரனார் ஆகியோர் 'சரஸ்வதி'க்காக உற்சாகத்துடன் பணி புரிந்தார்கள்.

இலக்கியவாதிகளுக்கு ஆர்வமூட்டிய விவாதங்களை சரஸ்வதி அவ்வப்போது வளர்த்தது. புதுமைப்பித்தன் இலக்கியம் பற்றி ஒரு விவாதம் சாகித்திய அகாடமி பரிசு அளிக்கிற போக்கு பற்றிய காரசாரமான கருத்துக்கள், மொழி வெறியர்கள் மற்றும் குறுகிய நோக்குடைய பண்டிதர்கள் போக்கை எதிர்த்து சூடான கட்டுரைகள், 'சென்னைக்கு வந்தேன்’ என்ற தலைப்பில் அநேக எழுத்தாளர்களது அனுபவங்கள், ‘நானும் என் எழுத்தும்' என்று பலரது எண்ணங்கள், இலக்கியத்தில் ஆபாசம் என்பது குறித்துக் கண்டனங்களும் மறுமொழிகளும்- இவ்வாறு, இலக்கியப் பிரியர்களுக்கு விருந்து அளித்திருக்கிறது.

‘நமது எழுத்தாளர் வரிசை' என்று எழுத்தாளர்களின் படத்தை அட்டையில் வெளியிட்டு, அவர்களைப் பற்றிய கட்டுரையை உள்ளே பிரசுரித்தது.