பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

வல்லிக்கண்ணன்


மார்க்ஸியக் கண்ணோட்டமும், கம்யூனிஸப் பற்றுதலும் கொண்ட 'முற்போக்கு இலக்கியவாதி'யாக வளர்ந்திருந்தார்.

'சரஸ்வதி' க்கு முந்தித் தோன்றிய முற்போக்கு இலக்கிய இதழாக ‘சாந்தி' விளங்கியது ("சரஸ்வதி 1955 மே மாதம்தான் பிறந்தது).

'சொத்தைக் கருத்துக்களும் சொற்சிலம்பங்களும் மிகுந்த இலக்கியப் போலிகளை இனம் காட்டவும் வெள்ளிக்காசுக்கும் விதேசியச் சிறுமைக்கும் இதயத்தையே எடைபோட்டு விற்றுவிட்ட எழுத்துலகத் துரோகிகளை அம்பலப்படுத்தவும், நமது பண்பாட்டையும் பாஷைவளத்தையும் இழிவுபடுத்தும் நாசக் கற்பனைகளை வேரறுக்கவும், தெம்பும் திராணியும், இளமையும், புதுமையும் நிறைந்த இலக்கிய சிருஷ்டிகளை வரவேற்கவும் வளர்க்கவும் புனித சங்கல்பம் பூண்டு 'சாந்தி' தோன்றுவதாக' அறிவிக்கப்பட்டது.

முற்போக்குச் சிறுகதைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. ரகுநாதன் நெஞ்சிலே இட்ட நெருப்பு என்றொரு தொடர்கதை எழுதினார்

புதுமைப்பித்தன் கடிதங்கள் சில பிரசுரமாயின. புதுமைப்பித்தன் நினைவுச் சிறுகதைப் போட்டி ஒன்றை 'சாந்தி' நடத்தியது. அதில் சுந்தர ராமசாமியின் தண்ணீர் என்ற கதை முதல் பரிசு பெற்றது.

சுந்தர ராமசாமி, ப. சீனிவாசன், டி. செல்வராஜ் ஆகியோர் அடிக்கடி சிறுகதைகள் எழுதினார்கள். மலையாளச் சிறுகதைகள் பல சு. ரா. தமிழாக்கமாக வெளிவந்தன.

அப்பாஸ், கிருஷ்ணசந்தர், யஷ்பால், முல்கராஜ் ஆனந்த் முதலியோரின் இந்திச் சிறுகதைகள் இடம் பெற்றன.

நா. வானமாமலை, சாமி. சிதம்பரனார், எஸ். ராமகிருஷ்ணன் கட்டுரைகளை சாந்தி பிரசுரித்தது. கட்டபொம்மு, மருதுபாண்டியர் போன்ற நாட்டுப் பாடல்கள் குறித்து ரகுநாதன் விரிவான கட்டுரைகள் எழுதினார். தி. க. சி. புத்தக விமர்சனம் எழுதிவந்தார்.

1955 டிசம்பரில் 'சாந்தி' யின் பன்னிரண்டாவது இதழ் ஆண்டு மலர் என்று வெளிவந்தது. இந்த மலர் இலக்கியத் தரமான கட்டுரைகள், கவிதைகளைக் கொண்டிருந்தது.