பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10. எழுத்து


சி. சு. செல்லப்பா தனது பத்திரிகைக்கு 'எழுத்து' என்று பெயர் வைத்ததே துணிச்சலான காரியம்தான். ஆங்கிலத்தில் 'ரைட்டிங்', 'நியூ ரைட்டிங்' என்றெல்லாம் பத்திரிகைகளுக்குப் பெயர் இருக்கிற போது, தமிழில் 'எழுத்து' என்று பெயர் வைத்தால் என்ன கெட்டுப் போகும் என்பது அவரது வாதம்.

‘எழுத்து' என்ற வார்த்தைக்கு அகராதி ரீதியாக அக்கரம், இலக்கணம், கல்வி, கையெழுத்து, ஆதாரச் சீட்டு, ஓவியம் என்றெல்லாம் விளக்கம் இருந்தாலும் இலக்கியப் படைப்பு என்ற அர்த்தத்தில்தான் பெயர் தாங்கி வருகிறது இந்த ஏடு என்று அவர் அறிவித்தார்.

'மக்களுக்குப் பிடிக்கிறதை நாங்கள் கொடுக்கிறோம் என்ற குரல் இலக்கிய உலகத்திலும் அரித்துக் கொண்டிருக்கிற ஒரு சூழ்நிலையில், பழக்க முறையாகி விட்ட ரீதியிலேயே கருத்துக்களையும் அலுக்கும்படியாக, ஒரே விதமாக கொடுக்கும் ஒரு மனப்பாங்கு பரவியுள்ள நிலையில், மக்களுக்கு இன்னின்னவைகளைக் கொடுத்து, படிக்கச் செய்யவேண்டும், புதுப்புது விதமாக நோக்கும் பார்வையும் கொண்டு, வெளியிட்டுச் சொல்ல வேண்டும் என்ற ஒரு நினைப்பு ஒரு மொழி இலக்கியத்துக்கு அவசியமானது. அந்த நினைப்புடன் எழுத்து ஏடுகள் பரவும்' என்று கூறி, பத்திரிகையின் நோக்கங்கள் விரிவாகவே முதல் இதழில் எடுத்துச் சொல்லப்பட்டன.

'முழுக்க முழுக்கக் கருத்து ஆழமும் கனமும் உள்ள ஒரு இலக்கியப் பத்திரிகையை, இந்தப் பாமரப் பிரியமான பத்திரிகைப் பரப்புக் காலத்தில் ஆரம்பிப்பது ஒரு சோதிக்கிற முயற்சிதான்' என்று நன்கு உணர்ந்தே தொடங்கப்பட்டது எழுத்து. அதன் நிபந்தனைகளும் வெளிப்படையாகவே அறிவிக்கப்பட்டன.

‘எழுத்து இரண்டு நிபந்தனைகளுடன் வெளி வருகிறது; 2000 பிரதிகளுக்கு மேல் அச்சாகாது. நேரில் சந்தாதாரராகச் சேர்பவர்களுக்குத்தான் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் நூதனமானவைதான். வாசகர்களின் தொகையைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்காக அல்ல; இலக்கிய