பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

67


வையாபுரிப் பிள்ளை, டாக்டர் சாமிநாதய்யர், மறைமலை அடிகள், திரு. வி. க. பற்றி க. நா. சு. எழுதியிருக்கிறார்.

வாழ்க்கை பற்றிய தத்துவ சிந்தனைகளைத் தொகுத்து க. சிதம்பர சுப்ரமண்யன் 'விண்ணும் மண்ணும்' என்ற தலைப்புடன் தொடர் கட்டுரை எழுதியுள்ளார்.

சி. கனகசபாபதி, பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றியும், புதுக்கவிதை சம்பந்தமாகவும், சங்க இலக்கியம் குறித்தும் ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுரைகளை மிகுதியாக எழுதியிருக்கிறார்.

வெ. சாமிநாதன், தருமுசிவராமு ஆகியோரின் தீவிர சிந்தனைகளையும் எழுத்து அதிகம் பிரசுரித்துள்ளது. ந. முத்துசாமியின் சிறுகதைகளை வெளியிட்டது. மற்றும் பல திறமையாளர்களை அறிமுகம் செய்திருக்கிறது.

'எழுத்து' சாதனைகளில் புதுக்கவிதைக்கு அது ஆற்றிய பணியே முக்கியமாகக் கருதப்படுகிறது. யாப்பில்லாக் கவிதை 'புதுக்கவிதை’ என்று பெயர் ஏற்று, ஒரு இயக்கமாக வளர்ந்து பெருகுவதற்கு எழுத்து நல்ல முறையில் பணியாற்றியதை இலக்கிய ரசிகர்கள் நன்கு அறிவர். சி. மணி, தி. சோ. வேணுகோபாலன், வைத்தீஸ்வரன் முதலிய கவிஞர்களின் திறமை பிரகாசிப்பதற்கு எழுத்து தளம் அமைத்தது. பிச்சமூர்த்தி கவிதைகளை நிறையப் பிரசுரித்துள்ளது.

தமிழ் இலக்கிய வளர்ச்சியில் சாதனை புரிந்தவர்களை கௌரவிக்கும் முறையில் அது சிறப்பு மலர்கள் வெளியிட்டிருக்கிறது. எழுத்து 5-வது ஏடு கு.ப. ரா. நினைவு மலர் என்றும், 7-வது ஏடு புதுமைப்பித்தன் நினைவு மலர் எனவும் உருவாயின. பிறகு, பிச்சமூர்த்தி மணிவிழா சிறப்பு ஏடு என்றும் 'பி. எஸ். ராமையா மலர்’ என்றும் வெளிவந்தன. எழுத்து 117-வது ஏடு 'சங்கு சுப்ரமண்யத்தின் நினைவு ஏடு' ஆகப் பிரசுரிக்கப்பட்டது.

‘எழுத்து' தொடர்ந்து வெளியிட்ட 'எதற்காக எழுதுகிறேன்?', ‘என்ன படிக்கிறேன் ஏன்?' ஆகிய கட்டுரை வரிசைகள் ரசிகர்களுக்கு இனிய விருந்தாக விளங்கின.

ஈழத்து எழுத்தாளர்கள் சிலர் எழுத்தில் அவ்வப்போது எழுதிக் கொண்டிருந்தார்கள். ஈழத்தில் இலக்கிய முயற்சி குறித்தும், விமர்சன