பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68

வல்லிக்கண்ணன்


நோக்கு பற்றியும் கே. எஸ். சிவகுமாரன், முருகையன் போன்றவர்கள் எழுதியிருக்கிறார்கள்.

சி. சு. செல்லப்பா இலக்கியச் சிந்தனையிலேயே பொழுதுபோக்கும் இயல்புடையவர். சதா நினைப்பும் பேச்சும் அவருக்கு இலக்கிய விஷயமாகவே இருக்கும். ஆகவே 'எழுத்து' பத்திரிகை சகல இலக்கியப் பிரச்னைகள் குறித்தும், எழுத்தாளர் விவகாரங்கள் பற்றியும், எழுத்து உலக விசேஷங்களில் ஆர்வமும் அக்கறையும் காட்டி வந்தது. அது உண்மையான எழுத்தாளர் பத்திரிகையாகத் திகழ்ந்தது. எழுத்தாளர் சம்பந்தமான விஷயம் அல்லது விசேஷம், எங்கே என்ன நடந்தாலும் “எழுத்து' அதைக் குறிப்பிட்டு அபிப்பிராயம் கூறியது.

இவ்வாறு எழுத்தாளர் மாநாடு, சங்கம், இலக்கியமும் குழுக்களும், சாகித்திய அகாடமியும் பரிசும், இரண்டாவது உலகத் தமிழ் கருத்தரங்குமாநாடு பற்றி எல்லாம் காரசாரமான கருத்துக்கள் 'எழுத்'தில் எழுதப்பட்டுள்ளன.

இப்பேர்ப்பட்ட பிரச்னைகள் பற்றிய அபிப்பிராயங்களைப் பரிமாறிக் கொள்ளும் களம் ஆக எழுத்து அரங்கம் விளங்கியது.

தன் எண்ணங்களைச் சொல்வதற்காக செல்லப்பா வாடைக் காற்று என்ற பகுதியைப் பயன்படுத்தி வந்தார்.

இவ்விதமெல்லாம் இருந்தும்கூட, செல்லப்பா எதிர் பார்த்தது போல்- தமிழ்நாட்டு வாசகர்களிடம் அளவுக்கு அதிகமான நம்பிக்கை வைத்தது-நடைமுறையில் நிகழவில்லை. இலக்கிய ஈடுபாடு கொண்ட ரசிக வாசகர்கள் 2000 பேர் தேறுவார்கள் என்று அவர் நம்பினார். நானூறு-ஐநூறு பேர் கூட 'எழுத்து' வளரத் துணை புரியவில்லை.

ஒவ்வொரு ஆண்டு நிறைவின்போதும், இதைப்பற்றி ஆசிரியர் பக்கத்தில் அவர் எழுதிக் கொண்டுதான் இருந்தார். தரமான இலக்கிய வெளியீடுகளை-நல்ல புத்தகங்களை- பரப்பும் நோக்கத்துடன் எழுத்துப். புத்தக இலக்கியச் சங்கம் (Book Club) பற்றி அறிவித்தார். ஆர்வத்தோடு பிரச்சாரம் செய்தார். அதுவும் வெற்றிபெறவில்லை.

'எழுத்து பிரசுரம்' ஆரம்பித்து நல்ல புத்தகங்களை வெளியிட்டார். அவ்வெளியீடுகளைச் சுமந்து கொண்டு ஊர் ஊராகப் போய், மாவட்டங்கள்தோறும் விற்பனை செய்யும் முயற்சியில் தீவிரமாக முனைந்தார்.