பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. 'எழுத்து' காலத்தில்


‘எழுத்து' நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே, எழுத்து போன்ற வேறு இரண்டு சிறு பத்திரிகைகள் தோன்றின.

அவை முற்றிலும் எழுத்து போன்றனவும் அல்ல; தத்தமக்கென்று தனித்தன்மை கொண்டிருந்தன.

ஒன்று க. நா. சுப்ரமண்யம் நடத்திய 'இலக்கிய வட்டம்', மற்றது, 'நடை'.

‘இலக்கிய வட்டம்' பெரிய சைஸில், மாதம் இருமுறை பத்திரிகையாக, சென்னையிலிருந்து வெளிவந்தது. 1964 ஜனவரியில் ஆரம்பிக்கப்பட்டது.

இலக்கிய விமர்சனமும், இலக்கியப் பிரச்னை குறித்துச் சிந்திப்பதும், படைப்புகளில் சோதனை முயற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதும் அதன் நோக்கமாக அமைந்திருந்தது.

சில விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான் கருத்துத் தெளிவும், நல்ல பலனும் ஏற்படும் என்று கூறி விமர்சனம், சிறுகதை, கவிதை பற்றிய தனது எண்ணங்களை க. நா. க. அடிக்கடி வலியுறுத்தினார்.

‘இலக்கியத் துறையில் செய்ய வேண்டிய காரியங்கள் எத்தனையோ இருக்கின்றன- இன்றைய தமிழ் இலக்கியம் பெருக' என்ற உணர்வுடன் நடத்தப்பட்ட பத்திரிகை இது. நமக்கு நாமே பல விஷயங்களையும் தெளிவு செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இலக்கியவாதிகள் அதில் கட்டுரைகள் எழுதினார்கள்.

சர்வதேச இலக்கியங்கள், இலக்கிய ஆசிரியர்கள் பற்றிய பயனுள்ள குறிப்புகள் தொடர்ந்து வெளிவந்தன.

படைப்புகளில் சோதனைகளுக்கு முதலிடம் அளிக்கப்பட்டது. புதுக்கவிதையையும் ஒரு சோதனைத் துறையாகத்தான் 'இலக்கிய வட்டம்’ கருதியது. சோதனை ரீதியில் கவிதை இயற்றிய அமெரிக்க, ஐரோப்பியக் கவிஞர்கள் பலரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டன.