பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

71


க. நா. சு. மயன் என்ற பெயரில் கவிதைச் சோதனைகள் நடத்தினார். டி. கே. துரைஸ்வாமி, சுந்தர ராமசாமி ஆகியோரது தீவிர சோதனைப் படைப்புகள் அதிகம் பிரசுரமாயின. மற்றும் சிலரது கவிதைகளும் அவ்வப்போது வந்து கொண்டிருந்தன.

'தமிழ் இலக்கியத்தில் சாதனை' யை அளவிடும் விதத்தில் 'இலக்கிய வட்டம்' ஒரு விசேஷ இதழைத் தயாரித்தது. 1947-1964 காலகட்டத்தில் தமிழில் நிகழ்ந்த இலக்கிய சாதனைகள் குறித்து தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், தி. க. சிவசங்கரன், ரதுலன், வெ. சாமிநாதன், ஆர். சூடாமணி, தெ. பொ. மீனாட்சி சுந்தரன், நகுலன், வல்லிக்கண்ணன் ஆகியோர் அவரவர் நோக்கில் அபிப்பிராயங்கள் தெரிவித்துக் கட்டுரைகள் எழுதினார்கள்.

க. நா. சு. எழுதிய 'நடுத்தெரு’ என்ற நாவல் சிறிது காலம் இணைப்பு ஆகப் பத்திரிகையுடன் வழங்கப்பட்டது. அந்த நாவல் பூர்த்தி பெறவில்லை.

‘இலக்கிய வட்டம்' எழுத்தாளர்களுக்கும் இலக்கியப் பிரியர்களுக்கும் மகிழ்ச்சியும் பயனும் அளிக்கக்கூடிய நல்ல விஷயங்களைக் கொண்ட சுவாரஸ்யமான இலக்கிய ஏடு ஆக வளர்ந்து வந்தது. ஆயினும் அது நெடுங்காலம் வாழவில்லை. ஒரு வருஷமும் சில மாதங்களும்தான் செயல்பட்டது.

'இலக்கிய வட்டம்' அதன் வளர்ச்சிக் காலத்தில், இலக்கிய ரசிகர்கள் படித்துப் பாராட்டக்கூடிய ஒரு பத்திரிகையாக இருந்ததே தவிர, 'எழுத்து' போல் இலக்கிய வரலாற்றில் அழுத்தமான பதிவுகளை உண்டாக்கிவிடவில்லை. ரசிகர்கள் சிறிது காலம் அதைப் பற்றிப் பேசினார்கள். அப்புறம் மறந்து விட்டார்கள்.

'நடை' காலாண்டு ஏடு ஆக சேலத்தில் தோன்றியது. 1968 அக்டோபரில் அதன் முதல் இதழ் வந்தது.

இந்த 'இலக்கிய முத்திங்கள் ஏடு' எழுத்து காலாண்டு ஏடாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் பிரசுரமாயிற்று. அதன் ஆசிரியர் கோ. கிருஷ்ணசாமி என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அது பலரது கூட்டு முயற்சியாலேயே உருவாயிற்று.

“தமிழ் மக்களுக்கு 'நடை' என்னும் புதிய ஏட்டினை அறிமுகப் படுத்துவதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம். நடை ஒர் இலக்கிய முத்திங்கள் ஏடு, இலக்கியப் படைப்புக்கும் திறனாய்வுக்கும்