பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. ஞானரதம்


லைப்ரேரியன் (நூலகர்) ஆகப் பணியாற்றிக் கொண்டிருந்த என். முகமது இப்ராகிம் (சித்திரபாரதி) இலக்கிய ஈடுபாடு கொண்டவர். இலக்கிய வளர்ச்சிக்காகப் புதுமையாக ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆர்வமும் செயல் துடிப்பும் உற்சாகமும் பெற்றிருந்தார் அவர்.

அவர் மதுரையில் பணிபுரிந்த காலத்தில், இலக்கிய ரசனையைப் பரப்புவதற்கு வாசகர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கி, விமர்சன விழா, ஆய்வுச் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள் பலவற்றுக்கு ஏற்பாடு செய்து வெற்றி கண்டிருந்தார். இது 1960 களில்.

பின்னர் இப்ராகிம் சென்னைக்கு வந்தார். நல்ல இலக்கியப் பத்திரிகை ஒன்று நடத்த வேண்டும் என்ற ஆசை அவருக்கு வெகு நாட்களாக இருந்து வந்தது. இலக்கியத்துடன் அரசியல், சமூகம், ஆன்மீகப் பிரச்னைகளிலும் அவர் அக்கறை காட்டிவந்தார். தனது பெயரை தேவ. சித்திரபாரதி என்று ஆக்கிக் கொண்டார். -

இலக்கியப் பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற அவரது ஆசை 1970-ல் செயல் மலர்ச்சி பெற்றது. ஞானரதம் தோன்றியது.

ஜெயகாந்தனிடம் அவருக்குப் பெரும் மதிப்பு உண்டு. ஜெயகாந்தனை மிகுதியும் போற்றிப் புகழ்ந்து வியந்து கொண்டிருந்த தேவ. சித்திர பாரதி, தான் நிர்வாக ஆசிரியராகப் பொறுப்பேற்ற ஞானரதம் மாத இதழுக்கு ஜெயகாந்தனை ஆசிரியர் ஆக்கினார்.

ஆறு மாத காலம் ஞானரதம் சிறிய அளவில் ( கிரவுன் சைஸ்) வெளிவந்தது. ஜெயகாந்தன் முன்னோட்டம் என்ற பகுதியில் பல்வேறு பிரச்னைகள் பற்றியும் கட்டுரைகள் எழுதினார். உரத்த சிந்தனை என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில் அளித்தார். அவ்வப்போது கவிதைகள் எழுதினார். -

“ரசனை என்ற பகுதியில், ரசனைக்கு அடிப்படையான சில ஆரம்பப் பயிற்சிகளை விளக்கும் நோக்கத்துடன் வெ. சாமிநாதன், ‘அனுபவம்,