பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

வல்லிக்கண்ணன்


விட்ட போதிலும், 1972 ஜூனில்தான் அஃக் முதல் இதழைக் கொண்டு வர முடிந்தது அவரால். -

அஃக் என்ற பெயர், அதற்கு அவர் தீட்டிய சின்னம் குறித்து பரந்தாமன், 1980 ஜூன்- செப்டம்பர் என்று காலக் குறிப்பிட்டுப் பிரசுரித்த 22-வது ஏட்டில் அவரது உள்ளத்தின் உணர்ச்சிகளையும் அனுபல் வெளிப்பாடுகளையும் ஒரு ஆவேசத்தோடு, உக்கிரமான தொனியில் ஒலிபரப்பிய சுயசரிதையில் இவ்வாறு விளக்கினார் :

‘மூன்று புள்ளிகளை உடைய கண்களே கலையும் விமர்சனமும் ஆகின்றன. 'அஃக்'ன் சின்னமான இந்தக் குறியீட்டில் கீழே இரண்டு சினங் கொண்ட சிமிட்டாத கந்தர்வப் பார்வைகள். மேலே எப்போது திறக்குமோ என்கிற உக்கிரத்துடன் நெற்றிக்கண். விழித்திருக்கும் இரண்டு கண்களின் இமை வட்டங்களில் AQ என்று டிஸைன் செய்திருக்கிறேன். இந்தக் குறியீட்டையே தலை கீழாகத் திருப்பிப் பார்த்தால், நெரிந்த புருவங்களுடன் கோபம் கொப்பளிக்கிற விழிகளும், கீழே உரத்துப் பேசுகிற பெரிய வாயும் தென்படுவதைக் காணலாம். இது தான் ஃ ஆய்த எழுத்து. இது உயிருமல்ல மெய்யுமல்ல. இது தனி. ஆதலால் இது தனி நிலை என்றும் வழங்கப்படும். இந்தப் பெயர் எல்லாரையும் வெகுவாகப் பாதித்து விட்டது. இது ஒரு குழுவுக்காக, கும்பலுக்காக, கூட்டத்துக்காகப் போடப்பட்ட மேடை அல்ல. ஓர் கலை இலக்கிய இயக்கத்துக்காகப் போடப்பட்ட மேடை எந்தப் பத்திரிகை மாதிரியும் இருக்கக் கூடாது என்றுதான் அஃக் வந்திருக்கிறது. அஃக் இன்னொரு ஏடு மாதிரியே இருக்க வேண்டுமென்றால் அஃக் எதற்கு?

இப்படி எண்ணம் வளர்த்த பரந்தாமன், ஒவ்வொரு இதழும் தரமாகவும் தனித் தன்மையோடும் திகழ வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை காட்டி வந்தார். அவர் அச்சுக் கலையில் தேர்ந்தவர்; நல்ல பயிற்சி பெற்றவர். அஃக் பத்திரிகையின் அச்சு அமைப்பு நேர்த்திக்கும் உயர்வுக்குமாக அகில இந்திய ரீதியிலான தேசியப் பரிசு-1976-ல் நற் சான்று இதழ் அவருக்கு வழங்கப்பட்டது.

வண்ணதாசன் கதைகள் முதல் தொகுப்பான கலைக்க முடியாத ஒப்பனைகள் புத்தகத்தின் உயர்ந்த அச்சுவேலை அமைப்பு நேர்த்திக்காக இரண்டாவது பரிசும் பரந்தாமனுக்கு அளிக்கப்பட்டுள்ளது- 1976-ல் அந்தத் தொகுப்பை அவர்தான் கலாரீதியாக அமைத்து அச்சிட்டுக் கொடுத்தார்.