பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

வல்லிக்கண்ணன்


கொள்கை ( ஸிம்பலிஸிம்) பற்றிய ஒரு கட்டுரை (கோபி எழுதியது ) அதில் இடம் பெற்றிருந்தன. விகடன் அளவில் 22 பக்கங்கள். தனி அட்டை கிடையாது.

இலக்கியப் பத்திரிகை நடத்துவதில் உள்ள சிரமங்களை அண்ணாமலை அறிந்திருந்தார். -

‘இலக்கியப் பத்திரிகைகளுக்கே உரிய எல்லாப் பிரச்னைகளும் நீலக்குயிலுக்கும் உண்டு. எல்லா வழிகளிலும் நீங்கள் இந்தப் பத்திரிகையின் வளர்ச்சிக்கு உதவுங்கள். இது மாதிரி பத்திரிகைகள் கஷ்டப்படுவது நல்ல படைப்புகளுக்காகவும்தான். அதனால் படைப்புகர்த்தாக்கள் தங்களின் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி ஆதரிக்கும்படி வேண்டுகிறோம்.

வழக்கம்போல் வேண்டுகோள் விடுக்கிறோம். உங்கள் சந்தாக்களை அனுப்பி உதவுங்கள். அதுவே பத்திரிகையின் முழு ஆதாரம். மீண்டும் மீண்டும் சந்தாக்களுக்காகவும் தரமான படைப்புகளுக்காகவும் எங்களை வேண்டுகோள் விடுக்கும் நிலையில் வைக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன், உங்கள்-

இந்த அறிவிப்பு முதல் இதழின் முதல் பக்கத்தில் அச்சாகியிருந்தது.

'நீலக்குயில்' முதலாவது இதழ் எழுத்தாளர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் தந்தது என்றே சொல்ல வேண்டும். ஆசிரியருக்கு வந்த கடிதங்கள் இதை நிரூபித்தன. படைப்பாளிகள் பலர் அதற்கு ஒத்துழைப்பு தர முன்வந்தனர்.

புதுக் கவிதை, சிறுகதை, கட்டுரைகளில் 'நீலக்குயில்' கவனம் செலுத்தியது.

நீல. பத்மநாபன், துரை சீனிச்சாமி, கல்யாண்ஜி, கே. ராஜகோபால், சி. ஆர். ரவீந்திரன், ந. ஜயபாஸ்கரன், ஷண்முக சுப்பையா, சே. சேவற் கொடியோன், தேவதேவன், தேவதச்சன் மற்றும் பலரது கவிதைகள் இப்பத்திரிகையில் பிரசுரமாயின. இலங்கை எழுத்தாளர் சிறீபதி புதுக் கவிதை பற்றி எழுதிய கட்டுரையையும் இது வெளியிட்டுள்ளது.

நகுலன் அஞ்சலி என்ற தலைப்பில் படைத்த ஒரு நீண்ட கவிதை-சோதனை முயற்சி-தொடர்ந்து வெளிவந்தது.