பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

வல்லிக்கண்ணன்


நீலக்குயில் சரியான பாதையில் முன்னேற ஆசைப்பட்டதை அதன் அறிவிப்பு வெளிப்படுத்தியது. ஆயினும், ஆய்வு இடம் பெறவில்லை.

கி. ராஜநாராயணன் சேகரித்த தமிழ்நாட்டு நாடோடிப் பாடல்கள் சில இதழ்களில் வெளிவந்தன. ஆராமுதம் எழுதிய ஒரு நாடகமும் வெளிவந்திருக்கிறது. சோவியத் சிறுகதைகள் சிலவற்றையும் பிரசுரித்துள்ளது 'நீலக்குயில்.’

முற்றிலும் புதுமையான ஒரு காரியத்தைச் செய்து அது விசேஷப் பாராட்டுதல்களைப் பெற்றது. முதல் ஆண்டு முடிந்ததும், இரண்டாவது ஆண்டின் முதல் இதழை (மே 1975) 'கடித இலக்கியச் சிறப்பிதழ்’ ஆகத் தயாரித்தது அது.

‘தமிழ் இலக்கிய வகைகளில், புதிதாக எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தின் உந்துதலில் செய்யப்பட்ட முயற்சியே இந்தக் கடித இலக்கியச் சிறப்பிதழ் இதில் வெளியாகியுள்ள கடிதங்களை எழுதியுள்ளவர்கள், தங்களது இலக்கிய அனுபவத்தால், எழுத்தாற்றலால், தமிழ் மக்களின் இதயங்களில் ஒரு நிலையான இடத்தைப் பெற்றுள்ளவர்கள். நமது பெரு மதிப்புக்கும் பேரன்புக்கும் உரியவர்கள். இதில் வெளியாகியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாணியில், மிகச் சிறப்பாக, அருமையாக எழுதப்பட்டுள்ளதால், இவற்றை இங்கு வெளியிடுவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறோம்' என்று நீலக்குயில் பெருமையுடன் வெளியிட்ட 18-வது இதழில், ரசிகமணி டி. கே. சி. ஸ்ரீமான் வி. வி. சீனிவாச அய்யங்காருக்கு எழுதியது; ராஜாஜி டி. கே. சி. க்கு எழுதியவை; நீதிபதி எஸ். மஹாராஜன் டி. கே. சி. க்கு எழுதியது; கி. ராஜநாராயணன், ஆ. மாதவன், தீப. நடராஜன், டி. எஸ். சேதுராமன், சுந்தர ராமசாமி, கு. அழகிரிசாமி, கல்யாண்ஜி, வண்ண நிலவன் கடிதங்கள் உள்ளன. ரசமான, புதுமையான, இனிய கடிதங்கள் அவை.

மாத இதழாகத் தயாரிக்கப்பட்ட நீலக்குயில் கால ஓட்டத்தில் தாமதமாக வெளிவருவது தவிர்க்க இயலாதது ஆகிவிட்டது. அதன் மூன்றாம் ஆண்டில் அது காலாண்டு ஏடு ஆக மாற்றப்பட்டது.

22-வது இதழில் இம்மாற்றம் அறிவிக்கப்பட்டது. அதையும் மிடுக்குடன்தான் செய்திருக்கிறது-