பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

95


ஆரம்ப வருடங்களில், 'சதங்கை' விசேஷமான அட்டை பெற்றிருந்தது. கலைச் சிலைகளின் போட்டோக்கள் வசீகரமாக அச்சிடப் பெற்றிருந்தன. பிறகு மாடர்ன் ஓவியங்கள் வந்தன. வர வர, சாதாத் தாளில் எழுத்தாளர்களது பெயர்கள் அச்சிடப்பட்டன. சில சமயம் பத்தே பத்துப் பக்கங்கள்-ஒரே ஒரு கட்டுரை அல்லது கதை, இரண்டு கவிதைகள்-தாங்கி இதழ் வந்தது.

இதெல்லாம் பத்திரிகை நடத்துவதில் வனமாலிகை எதிர்கொள்ள நேர்ந்த சிரமங்களைப் புலப்படுத்தின. அத்துடன், எப்படியும் ‘சதங்கை'யை நடத்தியே தீர்வது என்ற அவருடைய மன உறுதியையும், விடாப்பிடியான முயற்சியையும் வெளிப்படுத்தின.

வனமாலிகை, தரமான தமிழ் வாசகர்களிடம் நம்பிக்கையும் பெரு மதிப்பும் கொண்டவர் என்பதை ‘சதங்கை'யின் பல வருட இதழ்கள் நிரூபிக்கின்றன. எழுத்தாளர்களையும் பெயர் பெற்ற படைப்பாளிகளையும் பேட்டி கண்டு, அவர்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதே சம்பிரதாயமாக இருந்து வருகிற இலக்கியப் பத்திரிகை உலகத்தில், வனமாலிகை தரமான வாசகர்களைப் பேட்டி கண்டு, அவர்களது அபிப்பிராயங்களை விரிவாகப் பிரசுரித்தார். தனித் தன்மை கொண்ட இந்தப் பகுதி சதங்கையில் முதல் வருடத்தில் தொடர்ந்து இடம் பெற்றது. ‘வாசகர் பேட்டி' நாலைந்து பக்கங்கள் வரை வந்துள்ளது.

‘கருத்து மேடை' என்ற பகுதியும் குறிப்பிடத் தகுந்தது. ஐந்தாறு பேர் ( முக்கியமாக வாசகர்கள் ) கூடி குறிப்பிட்ட ஒரு எழுத்தாளரின் படைப்புகள் பற்றி சர்ச்சிப்பது. இரண்டாவது இதழில் ஜெயகாந்தன் கதைகளை அலசி ஆராய்ந்த உரையாடல் வந்துள்ளது.

இந்த நல்ல பகுதி அடிக்கடியோ, தொடர்ந்தோ இடம் பெறாமல் போனது ஒரு குறைதான்.

வாசகர்கள் 'சதங்கை' யின் குறை- நிறைகள் பற்றி மனம் திறந்து கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அவை விரிவாகவே பிரசுரிக்கப்பட்டுள்ளன.

வனமாலிகை பத்திரிகாசிரியத்தனம் பண்ணுவதில் ஆர்வம் காட்டவில்லை. எங்கள் பத்திரிகைக்கு எவர் எதை எழுதி அனுப்பினாலும் கூட்டவோ குறைக்கவோ வெட்டவோ திருத்தி மாற்றவோ உரிமை