பக்கம்:தமிழ்க் காதல்.pdf/79

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கத்தை மெய்ப்பு பார்க்க தேவை இல்லை

அகத்திணை பாகுபாடு

65ாதொரு இடர்ப்பாடும் இன்றி மணமாக முடிதல்வேண்டும் தான் தலைவியும் தோழியும் விரும்புவர். நினைத்தவாறே முடிந்தக்கால் பேருவகைப்படுவர். இதுவே இயல்பும் முறையும் ஒழுங்குமாகும். களவியல் நீரோட்டம் போலக் கற்பாகிவிடின், நெஞ்சக் குமுறலுக்கும் அறிவுத்தீட்டுக்கும் வேகவுணர்ச்சிக்கும் புரட்சிக்கும் இடமில்லை. எனவே ஐந்திணைக் களவிலக்கியம் பாடுவார்க்கும் படிப்பார்க்கும் சுட்டித்தனம் இல்லாக் குழந்தை போலவும், கட்சியற்ற அரசியல் போலவும் உணர்ச்சி வறண்டு தோன்றும். தலைவன் பக்கத்தார் மணம் பேச வந்தபோது, எல்லாத் தலைவியரின் பெற்றோரும் இசைந்துவிடார். மறுத்துவிட்டநிகழ்ச்சிகளும் உலகில் பல இருக்கவே செய்யும். இந்நிலையில் களவிலக்கியம் உயிர்ப்பும் மிடுக்கும் சுவையும் பெறுகின்றது. எங்கே தன் காதலன் விடுத்த தமரைப் பெற்றோர் மறுத்துப் போக விட்டுவிடுவார் கொல்லோ என்ற பேரச்சம் தலைவிக்கு ஒடிக் கொண்டிருக்கும் (ஐங். 230), மறுக்காதீர்கள் என்று முன்னே சொல்ல நாணம் இடங்கொடாது. மறுத்த பின்னர்ச் சொல்லக் கற்புக் காத்திராது. என் செய்வாள் பேதைப் பெரும்பெண் செய்தியறியாப் பெற்றோர்க்கு அஞ்சுவது கோழைமையாம்; தலைவன் தொடர்பை உரிய காலத்தும் வெளியிடப் பின்வாங்குவது மடமையாம். துணிவற்ற காதல் செயலற்ற கல்வியை ஒக்கும். எவரிடமிருந்து எத்தொல்லைவரினும் அவரையும் அதனையும் துரவெனத் தள்ளும் பெருவலி தூய மெய்க்காதலுக்கு இயல்பில் அமைந்தது. இம்மாநிறத்தாளின் பசலையை - பிரிவுச் சோர்கையை நீக்கினவன் யாரெனின், ஞாழல் மரத்தின் பெருங்கிளையை அலைகள் வளைக்கும் துறைவன்’ (ஐங். 145) என்று தோழி துணிந்து களவை வெளிப்படுத்தல் காண்க. குமரியர்க்குப் பிரிவும் பாலையும் இல்லை; காதலர்ப் புணர்ந்த மகளிர்க்கே அவையுள. ஆதலின் மாயோள் பசலை நீக்கினன்' என்ற தோழியின் சொற் கேட்ட பெற்றோர், ஒரு தலைவனோடு தம் மகளுக்குத் தொடர்பு ஏற்பட்டுளது போலும் என்றும், அத்தலைவன் இங்கு மணம்பேச வந்திருக்கும் வீட்டவரின் நம்பியே என்றும் புரிந்து கொண்டு மணத்துக்கு உடம்படுவர். உடம்படாது தலைவனது சுற்றத்தாரை வலிந்து பேசி, இவ்வாடவனுக்கு என் அருமைச் செல்வியைக் கொடுப்பதாவது என்று மறுத்துப் பெற்றோர் செருக்கி நிற்கும் அமயம், தோழி மறத்திபோல் துணிவுகொண்டு, இவனுக்கு உரியவள்தான் இவள்’ என்று மிக வெளிப்படையாக உள்ளதைச் சொல்வாள்: குன்றக் குறவன் காதல் மடமகள் அணிமயில் அன்ன அசைநடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரையு மாயின்