பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 ஆ சு. துரைசாமி

பொறிவழியாகப் பரந்து இயங்கும் அறிவை ஒருமுகப்படுத்துவதும், ஒருமுகமாக நிற்பதைப் பலதலையாகப் பிரிப்பதும் அந்தக் காரணமாகலின், அதனைப் பின்னர்க் கூறுகின்றார். அவை மனம், சித்தம், அகங்காரம், புத்தி என நான்கு நிலைத்தாய்ப் படி முறையில் அமைந்தன. மனத்தை அடுத்துச் சித்தமும் அதனையடுத்து அகங்காரமும் அதன் மேல் புத்தியும் நிற்கும். மனம் பற்றிய பொருளைச் சிந்திப்பது சித்தம்; சிந்தித்தவற்றைக் கொள்வது அகங்காரம்; உறுதி செய்வது புத்தி, மனம் ஒரு பொருளைப் பற்றச் சித்தம் சிந்தித்தலைச் செய்யப் புத்தி தெளிந்து நிச்சயிக்கும். இவை நான்கும் தமக்குரிய செயற்பாடின்றிக் கூத்தப் பெருமானது கூத்தினைக் கண்டு சிந்தையே யாய் நால்வகையாய் விரிந்து கழியும் மனோசத்தி அவ்வாறாகாது சிந்தையிலே தேக்கிச் செயல்படுவது காட்ட, சிந்தையேயாக என்று கூறுகிறார்.

இங்கே கூறிய வாயிற் காட்சி, மானதக் காட்சி என்ற இரண்டையும் தொழிற்படச் செய்வது குணதத்துவம். சத்துவம் தாமதம் இராசதம் என்று மூன்றாகி முறையே தெளிவு கலக்கம் மயக்கம் என்று மூன்று நிலையைக் கருவிகட்கு உண்டாக்கும். குணப்பகுதி மூன்றாகிக் கணந்தோறும் மாறும் செயலாதாகலின் அச்செயலெல்லாம் ஒடுங்கித் தெளிவு நிலை ஒன்றையே நிலவுவித்து மனமும் பொறியும் திருக்கூத்தில் தோய்விக்குமாறு விளங்க,