பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் : 27

காடும் காவும் கவின்பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறுபல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப்பூங் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும்

தெய்வ வழிபாடுகள் சிறப்புற நடைபெற்றன. கந்துடை நிலை என்றது பிற்காலத்தே சிவலிங்கம் என மொழி பெயர்க்கப்பட்டுவிட்டது. சிவவடிவம் கந்தும், அதன் பீடம் நிலையுமாகும். இவ்வுண்மையறியாத மடவோர் கந்தினை ஆண்குறி என்றும், நிலை யினைப் பெண்குறி என்றும் பிதற்றினர். சிலர் இப்பேதைமையை அறிவுடைமையாக எண்ணிப் பொய்க் கதை புனைந்து மனத்தே மானவுணர்வின்றி எழுத்தால் வரைந்துவிட்டனர். தெய்வ வழிபாட்டில் உயிர்ப் பலியும் குருதி கலந்த சோறும் படைக்கப் படுவதுண்டு. எங்கும் விளக்குகளை ஏற்றித் தெய்வங்கட்கு நீராட்டிப் பூச்சூடி மணி இயக்கி நறும் புகை எடுப்பர்; அக்காலை பலவேறு வாச்சியங்களும் முழங்கும். பின்னர்ப் பலவேறு நிறமுடைய பூக்களைத் தூவி வழிபாட்டுக்குரிய தெய்வங்களைப் பரவுவர். முருகனை வழிபடுவோர், கையால் தொழுது காலுற வணங்கி,

நெடும் பெருஞ் சிமயத்து நீலப் பைஞ்சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்தே ஆறமர் செல்வ,

ஆல்கெழு கடவுட் புதல்வ, மால்வரை மலைகள் மகனே, மாற்றோர் கூற்றே,