பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


282 இ ஒளவை சு. துரைசாமி

இருவரும் பணிந்த செயலை, “சேரர் பெருமான் எதிர்சென்று, தலைநாட்கமலப் போதனைய சரணம் பணியத் தாவல் பல, கலைநாட்டமுத ஆரூரர் தாமும் தொழுது கலந்தனரால்” என்றும், “சிந்தை மகிழும் சேரலனார் திருவாரூரர் எனுமிவர்கள், தந்தமணி மேனிகள் வேறாம் எனினும் ஒன்றாம் தன்மையராய், முந்த எழுங் காதலின் தொழுது தழுவிக் கொண்டன ரென்றும், “ஒருவர் ஒருவரிற் கலந்து குறைபாடின்றி உயர் காதல் இருவர்” என்றும் உரைக்கின்றார்.

இவ்வாறு நம்பியாரூரருடன் உயர் காதல் நண்பராகிய சேரமான் அவருடன் திருவாரூர்ப் பரமனைக் கண்டு பணிந்து வழிபட்டு அவர்பேரில் தாம் பாடிய திரு மும்மணிக்கோவையை, அந் நம்பியார் இனிது கேட்க அரங்கேற்றம் செய்கின்றார். அக்காலத்தே அதன் நன்மை இனிது விளங்க நம்பியாரூரரை அரசர் கேட்பித்தார் என்று கூறும் சேக்கிழார், “திரு மும்மணிக் கோவை நாவலூர் தம்முன்பு நன்மை விளங்கக் கேட்பித்தார்” என்றே கூறுகின்றார்.

இப்போது, நாம், இத்திரு மும்மணிக்கோவை யின் நலம் சிறிது காணலாம். இதன்கண் முப்பது திருப்பாட்டுக்கள் உண்டு. இவை யாவும் அகப் பொருள் துறையிலேயே அமைந்திருக்கின்றன. திருவந்தாதியிலும் ஐம்பது பாட்டுக்கள் இவ்வகத் துறையே பொருளாகக் கொண்டுள்ளன. இவ்வகத் துறையில், அகனைந்திணைக்குரியன சிலவும்,