பக்கம்:தமிழ்ச்செல்வம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்ச் செல்வம் 35

இனி, உயிர்கள் எண்ணில்லாதனவாகும். இவற்றை ஒருமலம் உடையவை, இருமலம் உடை யவை, மும்மலம் உடையவையென மூவகையாகக் கூறுபடுத்திச் சித்தாந்த நூல்கள் உரைக்கின்றன. பளிங்குக்கல் எந்தப் பொருளைச் சார்கிறதோ அந்தப் பொருளின் வண்ணத்தை யடைவது போல், உயிர்களும் சார்ந்த பொருளின் தன்மையைத் தாமும் பெறும் இயல்புடையவை. உயிர்ப் பொருளுக்கு எக்காலத்தும் அழிவு இல்லை; என்றும் உள்ள பொருளேயாம். சத்து இது அசத்து இது எனப் பகுத்தறிய வல்லது சத்தாகிய உயிர் நம் கண்ணொளி யானது; இருளோடு சேர்ந்தபோது இருளாயும் ஒளியோடு சேர்ந்தபோது ஒளியாயும் நிற்கும். அப்படி நின்றாலும் கண்ணொளி இருளும் ஒளியுமாகாது வேறே. அது போல, உயிர்ப்பொருள் சத்தொடுகூடிச் சத்தாகியும், அசத்தொடுகூடி அசத்தாகியும் சதசத்து என வேறாகவே நிற்பது. உயிர் எவ்வெவ் வுடம்பிற் சென்று தங்குகிறதோ அவ்வவ் வுடம்பளவும் நிறைந்து நிற்கும்; சிவ முதற் பொருளின் அருளால் கட்டு நீங்கி வீடுபேறடையும் தன்மையுடையது. உயிர் உணரும் தன்மை யுடையதேயாயினும் தானே எதனையும் உணராது; பிற அறிவுடைப் பொருள் உணர்த்த உணரும் சிறுமையுடையதாகும். உயிரது அறிவு, உணர்த்த உணரும் சிறுமையும், உலகுயிர்களை ஒன்றொன்றாய்ப் பார்த்தறியும் சிறுமையும் உடையது. இதனை, -