பக்கம்:தமிழ்ச் செல்வம்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை (நாடகப் பேராசிரியர்-ராவ்பகதூர் திரு. ப. சம்பந்த முதலியார் B.A., B. . அவர்கள்)

ஒரு நல்ல விஷயத்தைப் பலர் அறியும்படி செய்வதற்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று, அதைக் கவிதைகள் மூலமாகத் தெரிவிப்பது; அப்படித் தெரிவித்தால் சிலருக்கே அது பயன்படும். இரண்டாவது, கதையாக அவ் விஷயத்தை எடுத்துரைப்பது; அது இன்னும் சிலருக்குப் பயன்படும், மூன்றாவது, நாடக ரூபமாகத் தெரிவிப்பது; இது கற்றவர், கல்லாதவர், ஆண், பெண், குழந்தை முதலிய அனைவர்க்கும் பயனளிக்கும். இது என்னுடைய முடிவு. -

இந் நாடகத்தில் நமது முன்னோர்களாகிய தமிழர் களுடைய பண்பாடுகளையும், அரும்பெருங் குணங்களை யும், ஒன்றையும் விடாது திரட்டிப் பல காட்சிகளாக்கி, அக்காட்சிகளில் பேசும் நாடகப் பாத்திரங்களைக் கொண்டு அவைகளை விளக்கி, இக்காட்சிகளையெல்லாம் கோவையாக விலையுயர்ந்த மணிக்கோவையாக்கி, இதற்கு முதற் காட்சியென்னும் ஒர் மாணிக்கப் பதக்கத்தை அமைத்து ஒர் பெரிய நாடகமாக்கி, அதற்குத் "தமிழ்ச் செல்வம்' எனும் பெயரிட்டு, உலகிலுள்ள தமிழர்களுக்கெல்லாம் உதவியுள்ளார். என் நண்பர் கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்கள்.

இதுவரையில் நம் தமிழ் நாட்டில் வாழ்ந்த முன்னோர் களின் அரிய பெரிய குணங்களை அறிந்தவர் சிலரே. அறியாதவர் பலர். அவர்களுள் நானும் ஒருவன், இத்தகைய நிலையில் நமது முன்னோர்களின் குணங்களை அறியுமாறு, நமது கண்களைத் திறந்து விளக்கியுள்ளது இத் தமிழ்ச் செல்வம்.