பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/113

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

111


கூடாரம் - நூலாடையாலாகிய வீடு

தாமணி யடித்து எருதுகளின் மேலிருக்கும் பொதிகளையெல்லாங் கீழே தள்ளி யடுக்கிட்டுத் துள்ளுகின்ற எருதுகளுக்குக் கட்டியிருக்கும் பெரிய மணிகளையும் வரிசையாகக் கோத்துக் கழுத்திற் கட்டியிருக்கு மணிகளையும் கொம்புகளிற் கட்டியிருக்கும் சிகை மயிரினையும் நீக்கி வரிசை வரிசையாக நீருட்டிக் கட்டி உண்ணுதற்கு நல்ல புல்லும் போட்டு வாசனை பொருந்திய மாலையணிந்துள்ள அந்த வர்த்தகனும் கூடாரத்திற் சேர்ந்தான். கலைக்குடில் - நூலாடையாலாகிய வீடு, அது கூடாரமென்று சொல்லப்படுகின்றது.

நூல் : திரிவிரிஞ்சை புராணம் (1928) சைவ. எல்லப்ப நாவலர்
குறிப்புரை : டி.பி. கோதண்டராம ரெட்டியார்
(வேலூர் துரைத்தன உயர்தர
: பெண்பாடசாலைத் தமிழ்ப்பண்டிதர்)
ராஷ்டிரம் - நாடு

ஆந்திர சக்கரவர்த்திகள் காலத்தில் கர்மக ராஷ்டிரம் என்னும் ஒரு பூபாகம் ஆந்திர தேசத்தின் மத்தியில் சிறந்து விளங்கியது. இதுவே காலாந்தரத்தில் கம்மராஷ்டிரம் என்றாகிப் பின்னர் ’கம்ம நாடு’ என உச்சரிக்கப்பட்டதாகச் சிலசாஸனங்களால் தெரிய வருகிறது. இக்கம்ம நாட்டை பரிபாலித்த ஆந்திர சக்கரவர்த்திகளுக்குப் பின் சோழர்களும், கடைசியாக முகமதியர்களும் அரசாண்டதாகச் சரித்திரங் கூறுகிறது.

மேற்சொன்ன தமிழ் மன்னராகிய சோழர்கள் இம் மண்டலத்தைப் பரிபாலனஞ் செய்த பொழுதுதான் கர்மக ராஷ்டிரம் என்ற பெயர் கம்ம நாடெனத் திரிந்திக்கிறது. ஏனெனில் சுலபமாக உச்சரிக்க கர்ம என்பதை கம்ம என்று வழங்கியிருக்க வேண்டும். ஆகையால் கம்ம என்பது கர்ம என்பதின் மரூஉ மொழியாகும். ராஷ்டிரம் என்பதற்குத் தமிழ் வார்த்தையாகிய நாடு என்பதைச் சோழர்கள் வழங்கியிருக்க வேண்டும். இவையிரண்டுஞ் சேர்க்கக் கம்ம நாடு என்பதாகும். இதில் வசித்தவர்களே கம்மவார் என நாமங் கொண்டார்கள் என்று கொள்ளுதலே பொருத்தமாகத் தோன்றுகிறது.

நூல் : கம்ம சரித்திரச் சுருக்கம் (1928) பக்கங்கள் 12, 13
நூலாசிரியர் : சு. வேங்கடசாமி நாயுடு
(தமிழாசிரியர், முனிசிபல் ஹைஸ்கூல், பழநி)