பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்ச் சொல்லாக்கம்

65


மீனாட்சி - கயற்கண்ணி
தமிழே சிறந்தது
இராகம் - பியாகு, தாளம் - ஆதி
பல்லவி

தமிழே சிறந்ததென உனது நாமம் விளங்கச்
சாற்றும் அந்தப் பொருளை யாரறிவார் - அம்மா (தமிழே)

அநுபல்லவி

அமிழ்தினிற் சிறந்தது ஆரியத் துயர்ந்தது
அகத்திய னார்சிவ னிடத்தினி லுணர்ந்தது
அடிசீர் மோனை எதுகை தொடைசேர் தளையின்வகை
ஆகும் பாவினம் சந்தமா விரிந்தது - வண்ணத் (தமிழே)

சரணம்

திணைபால் காட்டும் விகுதி சிறப்புப் பொதுப் பகுதி
சேர்ந்த விதங்களெல்லாம் தென்மொழிக் கே தகுதி
இணையெனும் வடமொழி இருமொழியின் பேர்வழி
இசைக்கும் எழுதுவ தெல்லாம் வலஞ்சுழி - அதால் (தமிழே)

அகரத்தோ டகரஞ்சேர் வடமொழி தீர்க்க சந்தி
ஆகுமென் றுரைப்பார்கள் அறியார்கள் புத்தி நந்தி
மகரவொற் றழிவிதி மார்க்கமென் பதைப் புந்தி
வைத்தவர்மரு வென்றாரே முந்தி - அதால் (தமிழே)

கயற்கண்ணி மொழிபெயர்ப் பதற்கென உரைசெய்வார்
கந்தப் புராணமதின் காப்புச் செய்யு ளறியார்
இயற்படப் புணரியல் என்னுடன் வாதாடுவார்
இசை மராடி என்பதற் கென்புகல்வார் - அதால் - (தமிழே)

வடமொழி வழக்கில்லை வழங்குவர் தமிழ்ச் சொல்லை
மலைவேங் கடங்குமரி மற்றிரு கடல் எல்லை
இடமாக வகுத்தவர் இன்றுள்ளார் களுமல்லை
இயம்பும் மீனாட்சியென்ற பெயர்வல்லை - அதால்- (தமிழே)

- சங்கரதாஸ் சுவாமிகள்

நூல் : சங்கரதாஸ் சுவாமிகள் பக்திரசக் கீர்த்தனை (1920)