பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/11

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


தமிழ்த் தாத்தா

 

சென்ற நூற்றாண்டின் இறுதியிலும், இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலும் தமிழ்த் தாய்க்கு அணி செய்தவர்கள் இரண்டு பெரியவர்கள். ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னல் இருந்த சங்க நூல்கள் என்னும் பழைய அணிகலன்களைத் தேடி எடுத்து ஆராய்ந்து பதிப்பித்து அன்னையின் திருமேனியில் அணிவித்தார். மற்றொருவர் தாமே புதிய கவிகளை இயற்றி அணி செய்தார். முன்னவர் என்னுடைய ஆசிரியப் பிரான் மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள், பின்னவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். டாக்டர் ஐயர் முயற்சியால் முதலில் சீவகசிந்தாமணி வெளிவந்தது. பிறகு பத்துப்பாட்டு, அடுத்துப் பெளத்த காவியமாகிய மணிமேகலை வெளியாயின. எட்டுத் தொகையில் ஐந்து இலக்கியங்களை அவர் ஆராய்ந்து வெளியிட்டார். அவரோடு தொடர்புடையவர்கள் மற்ற நூல்களை வெளியிட்டார்கள்.

டாக்டர் ஐயர் தமிழ் இலக்கியத்தில் பழைய அணிகளை வெளியிட்ட பிறகு தமிழ்நாட்டில் ஒரு புத்துணர்ச்சி உண்டாயிற்று. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர்கள் வாழ்ந்த வாழ்க்கை நிலையையும், அவர்களது பண்பாட்டு நிலையையும், பழக்க வழக்கங்களையும் தெரிந்துகொள்வதற்கு அந்த நூல்கள் கருவிகளாக விளங்குகின்றன. உலகம் முழுவதும் உள்ளவர்கள் சங்க நூல்களைக் கண்டு விம்மிதம் அடைந்தார்கள். அவர்கள் அந்த நூல்களைப் படித்து ஆராயத் தொடங்கினார்கள். மிகப்பழங்காலத்தில் தோன்றிய அந்த நூல்கள், இன்றைய மாணவர்களும் படித்து, ஆராய்ந்து இன்புறுவதற்கு ஏற்றவாறு இருந்தது, வியப்பில் ஆழ்த்தியது. நாளடைவில் பழைய நூல்கள் எல்லாம் பயனற்றுப் போக, இன்றைய நூல்களுக்கு மதிப்பு உண்டாவது உலக இயற்கை. பழைய நூல்களைக் கண்காட்சியில்தான் காணலாம். ஆராய்ச்சியாளர் மாத்திரம் ஆராய்ந்து வருவார்கள். ஆனால் சங்க நூல்கள் அத்தகையான அல்ல. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றினாலும் அவற்றைப் படிக்கவும், ஆராயவும், அநுபவிக்கவும் முடிகிறது. அதனால் கம்பராமாயணம் முதலிய