பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

11

வேங்கடசுப்பையருடைய தாயாரின் அம்மான், கனம் கிருஷ்ணையர் என்ற இசைப் பெரும் புலவர். அவர் சங்கீத மார்க்கங்களாகிய கனம், நயம், தேசிகம் என்னும் வகைகளுள் கனமார்க்கத்தைப் பயின்று அதில் மிக்க தேர்ச்சி பெற்றார். வேங்கட சுப்பையர் அவரிடம் இசை பயின்றார். தம்முடைய குமாரரும் இசை பயின்று பெரிய சங்கீத வித்துவானாக வேண்டுமென்று கனவு கண்டுவந்தார். ஆனால் இந்தப் பெரியவருக்கு இசையில் ஓரளவு விருப்பம் இருந்தாலும் இவருடைய எண்ணமெல்லாம் தமிழை நன்றாகக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றே இருந்தது.

அரியலூரில் வாழ்ந்து வந்த வேங்கட சுப்பையர் அதன் பக்கங்களிலுள்ள பல ஊர்களுக்குச் சென்று இராமாயணப் பிரசங்கம் செய்வார்; இராமாயண நாடகக் கீர்த்தனங்களைப் பாடிப் பிரசங்கம் செய்வார். அதனால் ஆங்காங்கு அவருக்குப் பொருள் உதவி கிடைத்தது. அந்த வகையில் தம்முடைய பிள்ளையும் இசையோடு கூடிய பிரசங்கம் செய்து வாழ்க்கையைச் செவ்வையாக நடத்துவார் என்று நம்பியிருந்தார். டாக்டர் ஐயர் நாராயண ஐயர், சாமிநாதையர் என்பவர்களிடம் தம் இளமைக் கல்வியைப் பெற்றார், அரிச்சுவடி, எண்சுவடி முதலியவைகளையே அவர்களிடம் கற்றுக்கொண்டார். மணலில் எழுதுவதும், ஏட்டில் எழுதுவதும் அக்காலத்து வழக்கமாக இருந்தன. சாமிநாதையர் என்னும் ஆசிரியர் இசையிலும் வட மொழியிலும் தேர்ந்தவர். அவர் சில சிறிய வடமொழி நூல்களே இவருக்குக் கற்பித்தார். இவருடைய சிறிய தகப்பனார் தம் வீட்டிலேயே இவருக்குப் பாடம் சொல்லித் தந்தார்; சங்கீதப் பயிற்சியும் செய்து வைத்தார். அந்தச் சின்னப் பிராயத்தில் இந்தப் பெரியாருக்குச் சித்திரம் எழுதுவதில் விருப்பம் இருந்தது. காகிதங்களில் பூக்களைப் போலக் கத்தரித்து அமைக்கும் பழக்கம் உண்டாயிற்று. கற்பனை சிறந்த கவிஞர்கள் இயற்கையின் எழிலைக் கண்டு அநுபவித்து அப்படியே அதைக் கவிதையில் வடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதுபோல, இந்தப் பெரியாரும் இயற்கையைக் கண்டு கண்டு இன்புற்றார்.

இப்பெருமானுடைய தாயாரின் தந்தையாகிய கிருஷ்ண சாஸ்திரிகள் சிறந்த பக்திமான்; எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக்கொண்டிருப்பார். தம் பேரரிடம், எதை மறந்தாலும் சிவநாமத்தை மறக்காதே என்று உபதேசம் செய்தார். அக்காலம் முதல் இப்புலவர்பிரான் இறுதிக் காலம் வரையில் சிவ நாமத்தை மறக்கவில்லை. வேலை ஒழிந்த நேரங்களில் எல்லாம் பல ஆயிரம் தடவை சிவநாமத்தை உருப்போடுவது வழக்கம்.

அந்தக் காலத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. இந்தப் பெரியவருக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று