உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

தமிழ்த் தாத்தா


மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தமிழ் கற்றல்

மீனாட்சிசுந்தரம் பிள்ளை மாயூரத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்குரிய கட்டளை மடத்தை அடுத்து மேல்பாலிலுள்ள வீட்டில் இருந்தார். அவர் சைவத் திருக்கோலத்துடன் விளங்கினர். அப்புலவர் பெருமாளை முதல் முதலாகக் கண்ட போது இவருக்கு உண்டான உணர்ச்சியைச் சொல்லினால் சொல்ல முடியாது. இவரே சொல்வதைக் கேட்கலாம்

"அப்புலவர் பெருமான் வரும்போதே அவருடைய தோற்றம் என் கண்ணைக் கவர்ந்தது. ஒரு யானை மெல்ல அசைந்து நடந்து வருவதைப்போல் அவர் வந்தார். நல்ல வளர்ச்சி அடைந்த தோற்றமும், இளந் தொந்தியும், முழங்கால் வரையில் நீண்ட கைகளும், பரந்த நெற்றியும், பின்புறத்துள்ள சிறிய குடுமியும், இடையில் உடுத்திருந்த தூய வெள்ளை ஆடையும் அவரை ஒரு பரம்பரைச் செல்வரென்று தோன்றச் செய்தன. ஆயினும் அவர் முகத்திலே செல்வர்களுக்குள்ள பூரிப்பு இல்லை; ஆழ்ந்து பரந்த சமுத்திரம் அலையடங்கி நிற்பது போன்ற அமைதியே தோன்றியது. கண்களில் எதையும் ஊடுருவிப் பார்க்கும் பார்வை இல்லை. அலட்சியமான பார்வையும் இல்லை. தம் முன்னே உள்ள பொருள்களில் மெல்ல மெல்லக் குளிர்ச்சியோடு செல்லும் பார்வை தான் இருந்தது. அவருடைய நடையில் ஓர் அமைதியும், வாழ்க்கையில் புண்பட்டுப் பண்பட்ட தளர்ச்சியும் இருந்தன. அவருடைய தோற்றத்தில் உற்சாகம் இல்லை; சோம்பலும் இல்லை; படபடப்பில்லை; சோர்வும் இல்லை. அவர் மார்பிலே ருத்திராட்ச கண்டி விளங்கியது. பல காலமாகத் தவம் புரிந்து ஒரு தெய்வ தரிசனத்திற்குக் காத்திருக்கும் உபாசகனைப் போல நான் இருந்தேன். அவனுக்குக் காட்சியளிக்கும் அத்தெய்வம்போல அவர் வந்தார். என் கண்கள் அவரிடத்தே சென்றன. என் மனத்தில் உற்சாகம் பொங்கி அலை எறிந்தது. அதன் விளைவாக ஆனந்தக் கண்ணீர் துளித்தது.”

தந்தையார் தம் குமாரரை அறிமுகம் செய்துவைத்தார்."இந்த ஊரிலுள்ள கோபாலகிருஷ்ண பாரதியாரைத் தெரியும்” என்றும் தந்தையார் சொன்னார். பிறகு மீனாட்சிசுந்தரம் பிள்ளை இவரிடம் ஒரு பாடலைச் சொல்லச் சொல்லி இவருடைய கல்விப் பயிற்சியை ஒருவாறு தெரிந்துகொண்டார். சில கேள்விகளைக் கேட்டு இவரது அறிவின் நுட்பத்தை உணர்ந்தார். இவருடைய தந்தையார், “பையனை உங்களிடம் ஒப்படைத்துவிட்டேன். எப்போது இவன் பாடம் கேட்க வரலாம்?” என்று கேட்டார். புலவர் பெருமான்