உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தாத்தா

15

சிறிது யோசித்தார். “இங்கே படிப்பதற்கு அடிக்கடி யாரேனும் வந்த வண்ணமாக இருக்கிறார்கள். சில காலம் இருந்து படிப்பதாகப் பாவனை செய்துவிட்டுப் பிரிந்து சென்று என்னிடம் படித்ததாகச் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி அரைகுறை யாகப் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பயனும் உண்டாவதில்லை.நமக்கும் திருப்தி ஏற்படுவதில்லை” என்று சொல்ல ஆரம்பித்தார். உடனே இவர் தந்தையார், “இவன் அவ்வாறு இருக்கமாட்டான். தங்களிடம் எவ்வளவு காலம் இருக்க வேண்டுமானாலும் இருப்பான். தமிழ்க் கல்வி கற்க எவ்வளவு காலம் ஆனாலும் தாங்கள் சொல்லிக் கொடுக்கலாம். வேறு எந்தவிதமான கவலையும் இவனுக்கு இல்லை” என்று சொன்னார். “இவரது உணவுக்கு என்ன செய்வது?” என்று அந்தப் புலவர் பெருமான் கேட்டார். “அதற்குத் தாங்களே ஏற்பாடு செய்தால் நல்லது” என்று தந்தையார் சொன்னர்.

“திருவாவடுதுறையிலும், பட்டீச்சுரத்திலும் நான் தங்கும் காலங்களில் இவருடைய உணவு விஷயத்தில் ஒரு குறையும் நேராமல் பார்த்துக்கொள்ளலாம். இந்த ஊரில் இவர் ஆகார விஷயத்தில் ஒன்றும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேனே!” என்றார். அப்போது தந்தையார்,“ இங்கே இருக்கும்போது இவன் உணவுச் செலவிற்கு வேண்டிய பணத்தை எப்படியாவது முயன்று நான் அனுப்பிவிடுகிறேன்” என்றார். “அப்படியானால் ஒரு நல்ல தினம் பார்த்துப் பாடம் கேட்க ஆரம்பிக்கலாம்” என்று புலவர் பெருமான் சொன்னர். அப்போது இவருக்கு உண்டான உணர்ச்சிக் கொந்தளிப்பை எவ்வாறு சொல்வது? அதன் பின்பு ஆசிரியர் பெருமான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் மாணாக்கராக தம்முடைய வாழ்க்கையைத் தொடங்கினர். அதுமுதல் இந்தப் பெருமானுடைய வாழ்க்கையில் இரண்டாவது பகுதி ஆரம்பமாயிற்று.

சில காலம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் நேரே பாடம் கேட்கச் சந்தர்ப்பம் இல்லை. அவரிடம் பாடம் கேட்டு வந்த சவேரிநாத பிள்ளை என்ற கிறிஸ்தவர், நல்ல அன்பு உடையவர்: அவரிடமே இவர் பாடம் கேட்கும்படியாகப் பிள்ளை பணித்தார். அவரிடம் பாடம் கேட்கும்போது தம் அறிவாற்றலுக்கேற்ற வகையில் அவரால் சொல்லிக் கொடுக்க முடியாது என்பதை இவர் உணர்ந்தார். எப்படியாவது பிள்ளையிடமே அன்பைப் பெற்றுக் கொண்டு அவரிடம் நேரே பாடம் கேட்கவேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்தது.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை தம்முடைய வீட்டின் பின் பக்கத்தில் பல மரங்களை அப்படியே வேருடன் பறித்து வந்து நட்டு வைத்தார். அவை நன்றாக தளதளவென்று தளிர்த்து வரவேண்டுமே என்ற