பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தாத்தா

17

சக்கரவர்த்திக்கு உள்ளம் நெகிழ்ந்த பேரன்பு உண்டானது ஆச்சரியமன்று.

பெயர் மாற்றம்

ஒரு நாள் பாடம் சொல்லிக்கொண்டு வந்தபோது, “உமக்கு வேங்கடராமன் என்று ஏன் பெயர் வைத்தார்கள்?” என்று கேட்டார் ஆசிரியர். “எங்கள் குல தெய்வம் வேங்கடாசலபதி. அதனால் அந்தப் பெயர் வைக்கப்பெற்றது” என்றார். இவர். வேறு பெயர் உமக்கு உண்டா?' என்று பிள்ளை கேட்டபோது, “என்னைச் சாமா என்றும் அழைப்பார்கள்” என்று இவர் சொன்னர். “சாமி நாதன் என்ற பெயரின் சுருக்கம் அது” என்றும் எடுத்துச் சொன்னர். “இனிமேல், சாமிநாதன் என்ற அந்தப் பெயராலேயே உம்மை அழைக்கலாம் என்று நினைக்கிறேன்” என்று சொன்னார் பிள்ளை. அந்தப் பெயரே நிலைபெறுவதாயிற்று. தமிழ் உலகம் இன்றைக்கு இந்தப் பெரியவரை அந்தப் பெயராலேயே அடையாளம் கண்டுகொள்கிறது.

இடையிடையே காலை நேரங்களில் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் சென்று சங்கீதம் பயின்று வரலானார். இந்தச் செய்தியைப் பிள்ளையவர்களிடம் பாரதியாரே சொன்னர்.

ஒரு நாள் பாடம் சொல்லும்போது, “நீ பாரதியாரிடம் இசை கற்றுக்கொள்கிறாயாமே!” என்று புலவர் பெருமான் கேட்டார். “பழக்கம் விட்டுப் போகாமல் இருப்பதற்கு அவரிடம் கற்றுக்கொள்ளும்படி தகப்பனார் சொன்னார்” என்று இவர் சொல்லவே, “இசையில் அதிகப் பழக்கம் வைத்துக்கொண்டால் இலக்கியத்தில் அறிவு செல்லாது” என்று சொல்லிப் பிள்ளை போய்விட்டார்.

இசைப் பயிற்சியில் பிள்ளைக்கு ஊக்கம் இல்லை என்பதையும், அவர் சொன்னது உண்மையாய் இருப்பதையும் உணர்ந்து ஆசிரியப் பெருமான் ஏதோ காரணம் சொல்லிக் கோபாலகிருஷ்ண பாரதியாரிடம் கற்றுக்கொண்டு வந்த இசைப் பயிற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்தக் காலத்தில் நன்றாகக் கவி இயற்றும் ஆற்றலையும் இவர் பெற்றார்.


திருவாவடுதுறைக் காட்சி

முதல் முறையாக இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடன் திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சென்றார். அப்போது ஆதீன-