தமிழ்த் தாத்தா
19
பட்டீச்சுரத்தில்
திருவாவடுதுறையிலிருந்து பட்டீச்சுரம் போகும் வழியில் கும்ப கோணத்தில் தமிழ் ஆசிரியராக இருந்த தியாகராச செட்டியாரை ஆசிரியர் சந்தித்தார். செட்டியாரைப்பற்றிய பெருமைகளை எல்லாம் ஆசிரியர் கேட்டிருந்தார். அவர் நல்ல சிவப்பு, பளபளவென்று இருக்கும் தேகமும், அவரது வீர நடையும், கம்பீரமான பார்வையும், தைரியமான பேச்சும் இவருடைய உள்ளத்தில் பதிந்தன. செட்டியார் இவரைப் பார்த்து, "நீ என்ன என்ன நூல்களைப் பாடம் கேட்டாய்?" என்று கேட்டார், தாம் பாடம் கேட்ட நூல்களைப் பற்றி இவர் சொன்னார். “நீர் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லமுடிமா?" என்று கேட்டார் செட்டியார். "அப்படியே செய்வேன்" என்று இவர் சொன்னார். பிறகு பிள்ளையைப் பற்றிய பேச்சு அவர்களிடையே நிகழ்ந்தது. "ஐயாவிடம் பாடம் நன்றாகப் படியும், சோம்பேறியாக இருக்கக்கூடாது" என்று ஆசிரியரிடம் செட்டியார் சொன்னார். பிறகு ஆசிரியர் பிள்ளையுடன் பட்டீச்சுரம் சென்றார். பட்டீச்சுரத்தில் இருந்தபோது இவர் அதன் அருகில் இருந்த பல க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்துகொண்டார். நாகைப் புராணம், மாயூரப் புராணம் முதலிய நூல்களைப் பாடம் கேட்டார்.
ஆறுமுகத்தா பிள்ளை வீட்டில் எங்கும் இல்லாத புதிய முறைகள் இருந்தன. இரவு ஒன்பது மணிக்குமேல் எல்லோரும் சாப்பிடாமலே படுத்துக்கொள்வார்கள். நள்ளிரவில் ஆறுமுகத்தா பிள்ளை எழுந்திருந்து எல்லோரையும் எழுப்பி உணவு அருந்தச் செய்வார். அந்த விசித்திரமான செயல் பலருக்குப் பிடிக்காவிட்டாலும் ஆறுமுகத்தா பிள்ளையின் வற்புறுத்தலினால் அந்த முறை தவறாமல் நடந்து வந்தது. ஆறுமுகத்தா பிள்ளை சற்றுக் கடினமான இயல்பு உடையவர். மீனாட்சிசுந்தரம் பிள்ளையைத் தவிர மற்றவர்களிடம் அவர் மரியாதை காட்டமாட்டார். இவரையும் சில சமயம் கடிந்து கொண்டார். சவேரிநாத பிள்ளை என்பவர் அடிக்கடி மாயூரத்திலிருந்து அங்கே வந்து செல்வார். இரவு 12 மணிக்குமேல் உணவு செய்துவந்த வழக்கத்தை அவர் தைரியமாகப் பேசி மாற்றினார். அவர், "பட்டீச்சுரத்தில் இரவில் நெடுநேரம் பசியோடு வருந்தும்படி செய்த பிரமதேவன் எங்களை மரமாகப் படைக்கவில்லையே!" என்று ஒரு பாட்டுப் பாடி அதைச் சொன்னார். ஆறுமுகத்தா பிள்ளை அதைக் கேட்டார். சவேரிநாத பிள்ளை பக்குவமாக எடுத்துச் சொன்னதன் விளைவாக இரவு 10 மணிக்குள் யாவரும் உணவு அருந்தும்படி செய்தார். அவர் செய்த காரியத்தை யாவரும் மெச்சினார்கள். பிள்ளை ஆறு மாதங்கள் பட்டீச்சுரத்தில் <span title="தங்கியிருந்தார்.">தங்கி