உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

19

யிருந்தார். அப்போது பல பெரிய மனிதர்களை எல்லாம் கண்டு பழகும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது.

சரஸ்வதி பூஜைக்குத் தம்முடைய ஊராகிய உத்தமதானபுரம் செல்ல வேண்டுமென்று சொல்லி அப்படியே இவர் சென்றார். விஜய தசமியன்று தம்முடைய ஆசிரியரை விட்டிருப்பது நியாயமன்று என்றும், அன்று ஏதாவது பாடம் கேட்க வேண்டுமென்றும் ஆசிரியர் நினைத்தார். அவ்வாறு விஜயதசமியன்று பட்டீச்சுரம் சென்று நைடதத்தைப் பாடம் கேட்டார். மாயூரத்தில் முதல்நாள் பெற்றுக்கொண்டது நைடத நூல். இப்போதும் அதைப் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்ததற்குத் தம் உவகையை ஆசிரியர் வெளியிட்டார்.

அதன் பின்பு தம்முடைய தாய் தந்தையர் இருந்த கோட்டூர் என்ற ஊருக்கு ஆசிரியர் சென்றார். அப்போது வெப்பு நோய் இவருக்குக் கண்டது. சிலகாலம் கழித்து அந்த நோய் நீங்கினவுடன் மீண்டும் திருவாவடுதுறை சென்று தம் ஆசிரியரைக் காணவேண்டு மென்ற அவாமீதூர்ந்தது.


திருவாவடுதுறைக் குருபூஜை

தை மாதத்தில் அசுவதி நட்சத்திரத்தில் திருவாவடுதுறை ஆதீன ஸ்தாபகராகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தியின் குருபூஜை நடைபெறும். அன்று காலை ஆசிரியப் பெருமான் திருவாவடுதுறையை அடைந்தார். திருவாவடுதுறையில் குருபூஜை பெரிய விழாவாக நடக்கும். பலவகையான மக்கள் வந்து சேருவார்கள். எங்கும் சைவத் திருக்கோலம் விளங்கும், ஒரு பக்கம் இசைக் கச்சேரி நடைபெறும். மறுபக்கம் புலவர்கள் ஒன்றுகூடித் தமக்குள் உரையாடிக் கொண்டிருப்பார்கள். வடமொழிப் புலவர்கள் எல்லாம் தம் ஆராய்ச்சியில் கண்ட நுட்பங்களைத் தமக்குள் உரையாடி இன்புறுவார்கள். மிகச் சிறப்பாக அன்னதானம் நடக்கும். ஆசிரியர் திருவாவடுதுறையில் பிள்ளையவர்களைச் சந்தித்தார். இவரைச் சந்தித்தவுடன் பிள்ளைக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. "குருபூஜை ஆனவுடன் நான் மாயூரத்திற்குப் போவேன். போனவுடன் தொடர்ந்து நீர் பாடம் கேட்கலாம் அல்லவா?" என்று கேட்டார். மாணாக்கருக்குப் பாடம் கேட்கவேண்டுமென்ற ஆவல் இருப்பது இயல்பு. பாடம் சொல்லவேண்டுமென்ற அவா தம் ஆசிரியரிடம் மிகுதியாக இருப்பது கண்டு இவர் வியந்தார்.

குருபூஜை அன்று பிள்ளையவர்களோடு ஆசிரியர் தங்கியிருந்தார். அப்போது ஒரு புலவர் வந்து சுப்பிரமணிய தேசிகரைப்