பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/27

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

25

யவர்களுக்கு எத்தனையோ அன்பு இருந்தது. இனியும் நீர் இந்த மடத்துப் பிள்ளையாகவே நம்மிடம் பாடம் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து வரலாம்' என்று சுப்பிரமணிய தேசிகர் ஆறுதல் கூறினர்.

அவ்வாறே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் சில நூல்களை ஆசிரியப் பெருமான் பாடம் கேட்டார். கம்பராமாயணம், நன்னூல் முதலிய பாடங்கள் நிகழ்ந்தன. சித்தாந்த நூல்களைப் பாடம் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. தாம் பாடம் கேட்டதோடல்லாமல் அங்கிருந்த தம்பிரான்களுக்குப் பாடம் சொல்லும்படியாகத் தேசிகர் இவரைப் பணித்தார். அந்தக் காலத்தில் காவடிச் சிந்தை இயற்றிய சின்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் திருவாவடுதுறைக்கு வந்தார். தமிழ் படிக்க வேண்டுமென்ற அவா அவருக்கு இருந்தது. ஆசிரியப் பெருமானிடம் சில நூல்களைப் பாடம் கேட்டார்.

புதிய வீடு

ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் ஒரு புதிய வீடு கட்டி, அதில் ஆசிரியப் பெருமான் தங்குவதற்கு ஏற்பாடு செய்தார். அவரது விருப்பப்படியே ஆசிரியருடைய தாய் தந்தையர் அங்கே வந்து வாழத் தொடங்கினார்கள். 1877-ஆம் வருஷம் நவம்பர் மாதம் அந்தப் புதிய வீட்டில் ஆசிரியப் பெருமான் குடியேறினார். தம் மனைவியாரோடு வாழத் தொடங்கினார். மடத்திலிருந்தே இவரது குடும்பத்திற்கு வேண்டிய பொருள்கள் எல்லாம் கிடைத்தன. ஆசிரியப் பெருமானிடம் தேசிகர் காட்டிய பேரன்பையும் அவரது சிறந்த ஒழுக்கத்தையும் கண்டு எல்லோரும் வியப்படைந்தார்கள்.

மதுரையில் அந்தக் காலத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. அதற்குச் சுப்பிரமணிய தேசிகர் புறப்பட்டுச்செல்ல ஏற்பாடாயிற்று. அங்கிருந்து வேறு தலங்களுக்கும் போகலாம் என்று தேசிகர் நினைந்தார். அப்போது தம்முடன் ஆசிரியப் பெருமானையும் வரும்படி அழைத்தார். அப்படியே இருவரும் புறப்பட்டனர். மதுரை சென்று கும்பாபிஷேகத்தைத் தரிசித்து இன்புற்றார்கள். அப்போதுதான் பிற்காலத்தில் ஆசிரியருக்கு வேண்டிய உதவிகளை எல்லாம் செய்த சுப்பிரமணிய ஐயரை (ஜஸ்டிஸ் மணி ஐயர்) அங்கே முதல்முறையாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


முதலில் பதிப்பித்த நூல்

திருநெல்வேலியில் மேலை ரதவீதியில் திருவாவடுதுறைக்குரிய மடம் ஒன்று உண்டு. அங்கே சில நாள் தங்கி, அப்பால் அதற்கு

2