பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

தமிழ்த் தாத்தா

அருகிலுள்ள செவந்திபுரம் என்ற ஊருக்குச் சென்றார்கள். அங்கே வேணுவனலிங்கத் தம்பிரான் கட்டிய மடாலயத்திற்கு, சுப்பிரமணிய தேசிக விலாசம்' என்று பெயர் வைத்தார்கள். அதன் கிருகப்பிரவேசத்திற்கு வந்திருந்த புலவர்கள் எல்லாம் அதைச் சிறப்பித்துப் பாடினார்கள். அந்தப் பாடல்களைத் தொகுத்து வெளியிட முயன்றபோது ஆசிரியப் பெருமானே அந்த வேலையில் ஈடுபட்டார். பிற்காலத்தில் எத்தனையோ அருமையான சங்க நூல்களை எல்லாம் பதிப்பித்த ஆசிரியப் பெருமான் முதல்முதலாகப் பதிப்பித்தது அந்த நூல் என்றே சொல்ல வேண்டும்.

“௳ கணபதி துணை. திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை யாதீனத்தைச் சேர்ந்த செவந்திபுரத்தில் மேற்படி ஆதீனம் பெரிய காறுபாறு வேணுவனலிங்க சுவாமிகள் இயற்றுவித்த சுப்பிரமணிய தேசிக விலாசச் சிறப்பு. மேற்படி திருவாவடுதுறையில் மேற்படி சுவாமி களியற்றுவித்த கொலு மண்டபமென்னும் வேணுவனலிங்க விலாசச் சிறப்பு-இவை பல வித்வான்களால் பாடப்பட்டு மேற்படி ஆதீன அடியார் குழாங்களிலொருவராகிய ஆறுமுக சுவாமிகளாலும் மேற்படி திருவாவடுதுறை வேங்கட சுப்ப ஐயரவர்கள் புத்திரராகிய சாமிநாத ஐயரவர்களாலும் பார்வையிடப்பட்டு, திருநெல்வேலி முத்தமிழாகர அச்சுக் கூடத்திற் பதிப்பிக்கப்பட்டன. வெகுதான்ய வருடம், ஆனி மாதம்”

என்பது அதன் முகப்புப் பக்கம். அங்கிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடன் திருக்குற்றாலம், சங்கரநயினார் கோவில், திருச்செந்தூர் முதலிய தலங்களைத் தரிசனம் செய்துகொண்டு மீண்டும் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு வந்து சேர்ந்தார்.”

கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியர் ஆனது

திருவாவடுதுறையில் இருந்தபோது, 1880-ஆம் வருஷம் பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி தியாகராச செட்டியார் அங்கே வந்தார். அவர் சுப்பிரமணிய தேசிகரிடம் ஒரு விண்ணப்பம் செய்து கொண்டார். நான் என்னுடைய வேலையிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன். எனக்குப் பிறகு நான் வகித்த பதவியில் இருந்து பாடம் சொல்வதற்குத் தக்க ஆசிரியர் ஒருவரை நியமிக்க வேண்டும். சாமிநாத ஐயரையே அந்த வேலையில் நியமிக்கலாம். அவரது பிற்கால வாழ்வுக்கு அது மிகவும் உபயோகமாக இருக்கும்' என்று சொன்னார். சுப்பிரமணிய தேசிகர் முதலில் அதற்கு இணங்க