பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/32

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

தமிழ்த் தாத்தா

யெல்லாம் பார்த்து அந்த நூல் பதிப்பு,பழைய நூல்களுக்கெல்லாம் களஞ்சியம்போல இருப்பது கண்டு ஆராய்ச்சியாளர்களும் புலவர்களும் பெரு மகிழ்ச்சி அடைந்தார்கள்.


சுப்பிரமணிய தேசிகர் மறைவு

1888-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7-ஆம் தேதி திருவாவடு துறை ஆதீன கர்த்தர் சுப்பிரமணிய தேசிகர் பரிபூரணம் அடைந்தார்.அப்போது ஆசிரியப் பெருமான் சென்னையில் இருந்தார். இந்தச் செய்தியைக் கடித வாயிலாக அறிந்து துக்கக் கடலில் ஆழ்ந்தார். அப்போது உண்டான உணர்ச்சியைப் பற்றிப் பின் வருமாறு குறித்துள்ளார்.

'நின்ற இடத்திலே நின்றேன்.ஒன்றும் ஓடவில்லை.புத்தகத்தைத் தொடுவதற்குக் கை எழவில்லை,என்னுடைய உடம்பிலே இரத்த ஓட்டமே நின்றுவிட்டது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. என்னுடைய ஒவ்வொரு முயற்சியையும் பாராட்டி எனக்கு வந்த பெருமையைக் காணும்போது தாய் குழந்தையின் புகழைக் கேட்டு மகிழ்வதுபோல மகிழ்ந்து என்னைப் பாதுகாத்த அந்தப் பரோபகாரியையும் அவர் எனக்குச் செய்த ஒவ்வொரு நன்மையையும் நினைந்து நினைந்து உருகினேன்.

என் துக்கத்தை ஆற்றிக்கொள்ள வழியில்லை. என் உள்ளத் துயரமே செய்யுளாக வந்தது.அவர் திருவுருவத்தை இனிப் பார்க்க இயலாதென்ற நினைவு வரவே நான் மனத்தில் பதித்து வைத்திருந்த அவ்வுருவம் எதிர் நின்றது. இவ்வாறெல்லாம் நினைந்து துயரக் கடலில் மூழ்கிய ஆசிரியர் அன்று இரவே புறப்பட்டுத் திருவாவடுதுறை அடைந்தார். ஆதீனத் தலைவராக ஸ்ரீ அம்பலவாண தேசிகர் வந்தார். குரு பூஜை சிறப்பாக நடைபெற்றது. அதில் ஆசிரியப் பெருமானும் கலந்து கொண்டு தைரியமும், ஊக்கமும் பெற்றார்.

1888-ஆம் ஆண்டு ஆரம்பத்தில் சுப்பிரமணிய தேசிகரை இழந்த வருத்தம் ஆசிரியப் பெருமானுக்கு ஆறுவதற்குள், அவரது நன்மையைப் பெரிதும் கருதி வந்த தியாகராச செட்டியார் இறைவன் திருவடியை அடைந்தார். இதனால் அந்த ஆண்டின் முன்னாலும், பின்பும் ஆசிரியருக்கு அதிகத் துன்பம் உண்டாயிற்று.