பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

தமிழ்த் தாத்தா

எல்லாக் காதைகளுக்கும் இல்லை. அரும்பத உரை என்பது ஒன்று கிடைத்தது. அதை வைத்துக்கொண்டும் அங்கங்கே பலவற்றுக்குப் பொருள் செய்துகொண்டார். மேலும் சில ஏடுகள் கிடைக்கலாமோ என்ற எண்ணத்தில் 1891-ஆம் வருடம் கோடை விடுமுறையில் திருநெல்வேலி மாவட்டத்தை அடைந்து ஆங்காங்குள்ள பல சைவர்களுடைய வீடுகளில் தேடினார். இந்தப் பெரும் முயற்சியில் ஒன்றிரண்டு சிதிலமான ஏட்டுச் சுவடிகள் கிடைத்தன. கிடைத்தவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு மேலும் சிலப்பதிகாரத்தை நன்றாக ஆராய்ந்து அச்சிடத் தொடங்கினார்.


புறநானூறு வெளியீடு

சிலப்பதிகாரத்தை வெளியிட்டவுடன் மணிமேகலையையும் ஆராய்ந்து வெளியிடவேண்டுமென்ற ஆசை எழுந்தது. அடுத்தபடியாகப் புறநானூறு என்ற சங்க நூலைப் பதிப்பிக்கவேண்டுமென்ற விருப்பமும் உண்டாயிற்று. புறநானூற்றுக்கு ஒரு பழைய உரை உண்டு. முதல் 260 பாடல்களுக்கே உரை இருந்தது. அதற்குமேல் இல்லை. ஆகவே அந்தப் பகுதியைப் பதிப்பிக்கும்போது இடையூறு ஏற்பட்டது. பல காலம் பயின்ற பழக்கத்தால் ஒருவாறு பொருள் செய்துகொண்டார். புறநானூற்றை 1893-ஆம் வருடம் ஜனவரி மாதம் சென்னையில் அச்சிடத் தொடங்கினார். அவ்வாண்டு செப்டெம்பர் மாதம் ஆசிரியப் பெருமானுடைய தந்தையார் இறைவன் திருவடியை அடைந்தார். அதனால் ஆசிரியப் பெருமானுக்கு மிகவும் துயரம் உண்டாயிற்று. 10—12—1898-இல் பூண்டி அரங்கநாத முதலியார் காலமானார். தம் தந்தையாரை இழந்த துக்கமும், அரங்கநாத முதலியார் காலமான வருத்தமும் ஆசிரியரின் மனவுறுதியைக் குலைத்தன. என்றாலும் 1894-ஆம் வருடம் செப்டெம்பர் மாதம் புறநானூற்றுப் பதிப்பு நிறைவேறியது. பல அருமையான வரலாற்றுச் செய்திகள், பழங்கால மன்னர்கள், வள்ளல்கள், பல உபகாரிகள் ஆகியோரைப்பற்றிய செய்திகள் எல்லாம் அதனால் தெரியவந்தன. பிற்காலத்திலே அருமையான வரலாறுகளையும் ஆராய்ச்சிகளையும் பல புலவர்கள் எழுதி இருக்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் கருவியானது புறநானூறு என்னும் சங்க நூலே.

ஏட்டுச் சுவடியிலிருந்து பதிப்பிப்பது பெரிய காரியம் அன்று என்று சிலர் நினைக்கலாம். ஒரு நூலைப் பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மாணவர்களுக்கு அதைச் சொல்லிக்கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள். இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற விஷயங்களையும் அவர்கள்