தமிழ்த் தாத்தா
33
இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக்கொள்வதும் உண்டு, மற்றவர்கள் அதைப் பார்த்துப் பிரதி செய்துகொள்ளும் போது அந்தக் குறிப்புகளையும் பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இதுபோன்று எழுதுவதில் ஏற்பட்ட பிழைகள் அதிகம். சுவடிகளில் மேற்கோள் செய்யுட்களைக் கண்டு பிடிப்பதும் கடினம்.
உரை இல்லாத மூலங்கள் எழுத்தும் சொல்லும் மிகுந்தும் குறைந்தும், பிறழ்ந்தும் திரிந்தும் பலவாறு வேறுபட்டிருந்ததன்றி, சில பாடல்களின்பின் திணை எழுதப்படாமலும் இருக்கும். சில வற்றில் துறை எழுதப்படாமல் இருக்கும். சிலவற்றில் இரண்டுமே இரா. பாடினோர் பெயர் இருக்காது. சிலவற்றில் சிதைந்து இருக்கும். சிலவற்றில் இரண்டு பெயர்களுமே இரா. ஒரே எண்ணில் இரண்டு பாடல்கள் வரும். ஒரே பாடல் இரண்டு இடங்களில் வரும். சில முதற்பாகம் குறைந்தும், சில இடைப்பாகம் குறைந்தும், சில கடைப்பாகம் குறைந்தும் இருக்கும். ‘ஏட்டுச் சுவடி என்றால் திருத்தமாக இருக்கும். அப்படியே அச்சுக்குக் கொடுத்துவிடலாம்’ என்று சிலர் நினைக்கிறார்கள். அதைப் பார்த்துத் தலைசுற்றி அவற்றைப் பதிப்பிக்க முடியாது என்று போனவர்கள் பலர் உண்டு. யாராலும் இந்தப் பழைய நூலை வெளியிட முடியவில்லை. பொருள் செய்வதற்கே தடுமாற்றம் இருந்தது. ஆண்டவன் திருவருளினால் ஆசிரியப் பெருமான் தம் நிறைந்த தமிழ் அறிவைக் கொண்டு மிகவும் பொறுமையுடன் தொண்டாற்றியதால் தமிழகத்திற்கு அந்தப் பழங்காலப் புதையல்கள் கிடைத்தன. அவற்றை வெளியிட இவர் பட்ட சிரமங்கள் கொஞ்சநஞ்சமல்ல. அவை யாவும் இப்போது மறந்துபோயின. பத்துமாதம் குழந்தையைச் சுமந்து, பல்வேறு துன்பங்களுக்கிடையே பிரசவ வேதனையுற்றுக் குழந்தையை ஈன்ற தாய், தன் அருகில் குழந்தையைச் கொண்டுவந்து போட்டவுடன் தான் பட்ட சிரமங்களை எல்லாம் மறந்துபோய்ப் பேரானந்தம் கொள்வது போல, பதிப்பிக்கப்பெற்ற புறநானூற்றுப் புத்தகத்தைப் பார்த்தவுடன் ஆசிரியப் பெருமானுக்குப் பெருமகிழ்ச்சி உண்டாயிற்று.
மணிமேகலையை வெளியிட்டது
புறநானூற்றுக்குப் பிறகு மணிமேகலையை ஆராயத் தொடங்கினார். மணிமேகலை பெளத்த காவியம், ஜைன காவியமாகிய சீவக சிந்தாமணியில் ஏற்பட்ட சந்தேகங்களைப் போக்குவதற்கு ஜைனர்கள் பலர் இருந்தார்கள். ஆனால் பெளத்தர்கள் தமிழ் நாட்டில் யாரும் இல்லை. மணிமேகலை பெளத்த சமயக்கொள்கை