பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/36

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ்த் தாத்தா

நிரம்பின நூல். ஆகவே அதைப் படித்தபோது பல செய்திகள் தெரியவில்லை. வீரசோழியம் என்ற இலக்கண நூல் ஒரு பெளத்தரால் இயற்றப்பட்டது. அதில் பெளத்த சமயக் கருத்துக்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்தும் பல செய்திகளை அறிந்துகொண்டார். சென்னையில் மளூர் ரங்காசாரியார் என்ற பேராசிரியர் இருந்தார். அவர் பெளத்த நூல்களை நன்றாகக் கற்றவர். அவர் வாயிலாகப் பல செய்திகளை இவர் அறிந்துகொண்டார். பெளத்த சமய சம்பந்தமான நூல்கள் பல ஆங்கிலத்தில் இருந்தன. அவற்றை யெல்லாம் தருவித்து ரங்காசாரியாரிடம் கொடுத்தார். அவர் அவற்றைப் படித்து, பெளத்த மதக் கருத்துக்களை எல்லாம் சொன்னார். அவற்றையெல்லாம் மிக்க ஆர்வத்தோடு ஒரு மாணாக்கனைப்போலத் தொகுத்துக்கொண்டார். இடையே புறப் பொருள் வெண்பா மாலையை ஆசிரியர் பதிப்பித்தார். 1896-ஆம் வருடம் ஜூன் மாதம் மணிமேகலையைச் சென்னையில் கொண்டு வந்து அச்சிடக் கொடுத்தார். பெளத்த சமய சம்பந்தமாகத் தாம் தெரிந்துகொண்டவற்றை எல்லாம் புத்தர், பெளத்த தருமம், பெளத்த சங்கம் என்னும் தலைப்பில் எழுதி அவற்றை மணிமேகலைப் பதிப்பின்முன் அமைத்தார். அகராதி, அரும்பதவுரை ஆகியவை எல்லாம் இணைக்கப் பெற்றன. 1898-ஆம் வருடம் ஜூலை மாதத்தில் மணிமேகலை நிறைவேறியது. அதில் 59 தமிழ் நூல்களிலிருந்தும், 29 வடமொழி நூல்களிலிருந்தும் மேற்கோள் காட்டியிருந்தார். அரும்பதவுரையில் கண்ட சொற்களுக்கு விளக்கங்களையும் கொடுத்திருந்தார். மணிமேகலைக் கதைச் சுருக்கத்தையும் சேர்த்திருந்தார்.

மேலே ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து, அகநானூறு, பெருங்கதை ஆகிய நூல்களில் ஆசிரியர் தம் கருத்தைச் செலுத்தலானார். ஐங்குறுநூறு என்பது எட்டுத் தொகையில் ஒன்று. ஒரு திணைக்கு நூறு பாட்டாக ஐந்து திணைகளுக்கு ஐந்நூறு பாடல்களையுடையது. பதிற்றுப்பத்து, சேரமன்னர்களுடைய பெருமையைச் சொல்வது, அகநானூறு அகப்பொருள் அமைதியுடையது. உதயணன் சரித்திரத்தைச் சொல்வதே பெருங்கதை. ஒன்றன்பின் ஒன்றாக அவற்றையெல்லாம் வெளியிடலாம் என்ற எண்ணத்தினால் அவற்றில் தம்முடைய உள்ளத்தைச் செலுத்தினர் ஆசிரியப் பெருமான்.


கிராமதானத்தை மறுத்தது

ஆசிரியர் பதிப்பித்த மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை ஆகியவற்றுக்கு உதவி செய்தவர் இராமநாதபுரம் பொ. பாண்டித்துரைத் தேவர் ஆவர். அவர் மதுரையில் தமிழ்ச்