பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

தமிழ்த் தாத்தா

குறைந்த வாடகைக்கு விட்டிருக்கிறீர்கள்? வேறு யாருக்காவது மாற்றிவிட்டால் அதிக வாடகை கிடைக்குமே!’ என்று சொல்லியிருக்கிறார்.

அந்த வீட்டின் சொந்தக்காரருக்கு ஆசிரியரிடம் மிகவும் மதிப்பு உண்டு. இதைக் கேட்டவுடன் அவருக்குக் கோபம் வந்து விட்டது. "ஐயா, நான் அவரிடம் 20 ரூபாய் வாங்குவதே தவறு. என் கையிலிருந்து மாதம் 20 ரூபாய் கொடுத்து அவரை அந்த வீட்டில் குடியிருக்கச் சொல்ல வேண்டும். அவர் அவ்வளவு பெரியவர். அவர் குடியிருப்பதனால்தான் இன்றைக்கு என் வீடு ஒரு கோவில் மாதிரி இருக்கிறது. எத்தனையோ பெரியவர்கள் அவரைப் பார்ப்பதற்காக அந்த வீட்டிற்கு வருகிறார்கள். அவரே இடம் போதவில்லை என்று வேறு வீடு பார்த்துக் கொண்டு போனாலன்றி, நான் அவரை என் வீட்டிலிருந்து போகச் சொல்ல மாட்டேன்" என்று சொல்லிவிட்டார்.

அந்தப் பேராசிரியர் இன்னும் சில நாள் கழித்து அந்த வீட்டின் சொந்தக்காரரிடம் சென்று, "ஐயா, அந்த வீட்டிற்கு நல்ல விலை கிடைக்கும். அந்த வீடு சிறியதாக இருப்பதால் அதை நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டு, நீங்கள் வேறு ஓர் இடத்தில் பெரிய வீடாகக் கட்டலாமே" என்று சொன்னார், "நான் அந்த வீட்டை விற்பதுபற்றி இதுவரை யோசித்தது இல்லை. விற்கிற எண்ணம் வருகிறபோது உங்களுக்குச் சொல்லி அனுப்புகிறேன். இப்போது நீங்கள் போய் வாருங்கள்" என்று அதன் சொந்தக்காரர் சொல்லிவிட்டார்.

எனினும் அந்தப் பேராசிரியர் சொன்னது அவரது மனத்தை உறுத்த ஆரம்பித்தது. 'அந்த வீடு நமக்குச் சொந்தம் என்பதனால் தானே, இப்படிப் பலரும் பல விதமான எண்ணங்களை நம்மிடம் வந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்? ஆசிரியருக்கே அந்த வீட்டை உரியதாக்கிவிட்டால் என்ன?’ என்று நினைக்கலானார்.

ஒரு நாள் ஆசிரியரிடமே வந்து, "ஐயா, உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் உண்டா? அப்படி இருந்தால் நான் இந்த வீட்டை உங்களுக்கே மூவாயிரம் ரூபாய்க்குத் தருகிறேன்” என்று சொன்னார்.

அப்போது ஆசிரியருக்குக் கும்பகோணத்தில் ஒரு வீடு சொந்தமாக இருந்தது. சென்னையில் வீடு வாங்குவதைப்பற்றி இவர் நினைக்கவில்லை. எனவே வீட்டுக்காரர் கேட்டவுடன் தமக்கு வீடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

அடுத்த ஆண்டு அந்தப் பேராசிரியர் வேறு ஒருவர் மூலமாக அந்த வீட்டிற்கு 4,500 ரூபாய் விலை பேசி முன்பணம் கொடுக்க ஏற்பாடு செய்தார். அந்தச் செய்தியை ஆசிரியர் அறிந்தவுடன்