பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

தமிழ்த் தாத்தா

வில்லை. கிடைத்ததை ஒருவாறு செப்பம் செய்து பதிப்பிக்க வேண்டுமென்று ஆசிரியர் எண்ணினார். அதைப் பதிப்பிக்க ஆசிரியர் எண்ணியிருப்பதை அறிந்து பலர் அதைப் பற்றி விசாரித்தார்கள். ஒருவர் பெருங்கதை முழுவதும் தம்மிடம் இருப்பதாகச் சொல்லி, அதை அனுப்பிவைப்பதாகப் பணம் வாங்கிப் போனார். பல நாட்கள் சென்றன. அவர் அனுப்பவில்லை. வடமொழியில் பிரகத்சம்கிதா என்றிருந்த நூலை வடமொழி வல்லுநர்களைக் கொண்டு ஆராயச் சொல்லி, கருத்துக்களை அறிந்துகொண்டு, அவற்றிலிருந்த செய்திகளைப் தொடர்புபடுத்திக்கொண்டு, முழுவதுமாக இல்லாமல் இருந்த அந்த நூலே அச்சுக்குக் கொடுத்தார். அந்தப் பெருங்கதைப் பதிப்பு 1924-ஆம் ஆண்டு வெளியாயிற்று. அதன் பதிப்பு வேலை ஐந்து ஆண்டுகள் நடந்தது. இவ்வளவு நீண்ட காலம் எந்தப் புத்தகத்திற்கும் ஆசிரியர் செலவழித்தது இல்லை.


மீனாட்சி தமிழ்க் கல்லூரியில் முதல்வராதல்

1924-ஆம் ஆண்டு சிதம்பரத்தில் ராஜா அண்ணாமலை செட்டியார் ஒரு தமிழ்க் கல்லூரியையும், ஒரு வடமொழிக் கல்லூரியையும் தொடங்க எண்ணினார். தமிழ்க் கல்லூரிக்குத் தக்க ஒருவரை முதல்வராக நியமிக்கவேண்டுமென்று எண்ணியபோது ஆசிரியப் பெருமான் நினைவு வந்தது. சில பேரை ஆசிரியப் பெருமானிடம் அனுப்பி எப்படியாவது இந்தப் பதவியை ஒப்புக்கொள்ளவேண்டும் என்று வற்புறுத்தினர். ராஜா அண்ணாமலை செட்டியாரே நேரில் வந்தும் தம் விருப்பத்தைத் தெரிவித்தார். சிதம்பரம் சென்றால் நாள்தோறும் நடராஜப் பெருமானைத் தரிசிக்கலாம் என்று நினைந்து அப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள ஆசிரியர் இசைந்தார். சிதம்பரம் தீட்சிதர்கள் எல்லோரும் ஆசிரியப் பெருமான் அங்கு வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.

1924-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆசிரியர் சிதம்பரம் சென்றார், இவர் அங்கே தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தனர். முதலில் இவர் தங்கியிருந்த இல்லத்திலேயே மீனாட்சி தமிழ்க் கல்லூரி ஆரம்பமாகியது. அப்போது மீனாட்சி கலைக் கல்லூரி முதல்வராக நீலகண்ட சாஸ்திரியார் இருந்தார். அவரும் ஆசிரியப் பெருமானுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தார்.

மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 24-வது ஆண்டு விழா 1925-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8-ஆம் தேதி நடந்தது. அவ்விழாவுக்கு சி. பி. இராமசாமி ஐயர் தலைமை தாங்கினார். தமிழ்ச் சங்கத்தின் அழைப்புக்கிணங்க முன்கூட்டியே ஆசிரியப் பெருமான் மதுரை அடைந்தார்.