பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

தமிழ்த் தாத்தா

சரஸ்வதி என்னும் துறவி, நான் தமிழில் செய்யுள் எழுதுவதைப் பார்த்து, "நீங்கள் ஐயரவர்களிடம் சென்றால் நன்றாகத் தமிழ் படிக்கலாம்" என்று சொன்னார். சேந்தமங்கலம் மிட்டாதாராக இருந்த ஐராவத உடையாருக்கும், அவ்வாறு செய்வது நலம் என்று தோன்றியது.

1927-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வடலூருக்குச் சென்று அப்படியே சிதம்பரம் போய் ஆசிரியர் அவர்களைப் பார்த்துவர எண்ணினோம். அவ்வாறே நாங்கள் யாவரும் வடலூர் சென்று தைப் பூசத்தைத் தரிசித்துக்கொண்டு சிதம்பரம் சென்றோம். ஆசிரியரைப் பார்த்தோம்.

அப்போது நான் சட்டை அணிவதில்லை. கழுத்தில் ருத்திராட்சத்துடன் நெற்றியில் விபூதி பூசிக்கொண்டிருந்தேன். என்னைப் பார்த்தவுடன் ஒரு வகையான அன்பு ஆசிரியருக்கு உண்டாயிற்று. “இவர் நன்றாகக் கவிதை பாடுவார். தமிழில் நன்றாகப் பேசுவார். உங்களிடம் இருந்து பாடம் கேட்க விரும்புகிறார்" என என்னுடன் வந்தவர்கள் சொன்னார்கள்.

அப்போது ஆசிரியர் பிள்ளையவர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். பாடம் கேட்கப் பலரும் அவரிடம் வந்ததையும், இடையிலே சென்றுவிட்டதையும் சொன்னார். "நான் இப்போது கல்லூரியிலிருந்து விலகிச் சென்னைக்கே போக இருக்கிறேன். கல்லூரியில் சேர்ந்து படிக்க விருப்பமா? அல்லது என்னிடம் இருந்து படிக்க விருப்பமா?" என்று கேட்டார். அவரிடம் இருந்தே படிக்க விரும்புவதாக நான் சொன்னேன்.

உடனே ஏதாவது ஒரு பாடலைச் சொல்லும்படி சொன்னார். "நான் ஒரு கம்பராமாயணப் பாடலைச் சொன்னேன். அதில் உள்ள நயம் என்ன என்று கேட்டார். அதையும் எடுத்துச் சொன்னேன். அதைக் கேட்ட ஆசிரியர் உள்ளத்திலே பேருவகை ஏற்பட்டிருக்க வேண்டும். “உணவுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துகொண்டு சென்னைக்கு வந்தால் என்னிடம் பாடம் கேட்கலாம்" என்று சொன்னார்.

1927-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10-ஆம் தேதி ஆசிரியப் பெருமான் சிதம்பரத்திலிருந்து சென்னைக்குத் திரும்பினார். இவர் பிரிவை எண்ணிப் பலர் வருந்தினார்கள். வழியனுப்பு விழா நடத்தினர்.


பல்கலைக் கழகத்தில் பேச்சு

சென்னைக்கு வந்தவுடன் பல்கலைக் கழகத்திலிருந்து பத்துநாட்கள் பழைய நூல்களைப் பற்றிப் பேசவேண்டுமென்று ஆசிரியருக்கு அழைப்பு வந்தது. 1827-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ஆம் தேதி